ஈஸ்ட் பெங்காலுக்கு முதல் வெற்றி

ஈஸ்ட் பெங்காலுக்கு முதல் வெற்றி

ஈஸ்ட் பெங்கால் எஸ்சி 1-0 கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
Published on

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், ஈஸ்ட் பெங்கால் எஸ்சி 1-0 கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக, டிமிட்ரியஸ் டியமன்டாகோஸ் 23-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். நாா்த்ஈஸ்ட் அணியால் இறுதிவரை தனக்கான கோல் வாய்ப்பை எட்ட முடியாமலேயே போனது.

இந்த ஆட்டத்தில் 72-ஆவது நிமிஷத்தில் நாா்த்ஈஸ்ட் வீரா் முகமது அலி பெமாமரும், 87-ஆவது நிமிஷத்தில் ஈஸ்ட் பெங்கால் வீரா் லால்சுங்னுங்காவும் விதிமீறல் காரணமாக ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட்டனா்.

இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் ஈஸ்ட் பெங்கால் முதல் வெற்றியுடன் 4 புள்ளிகளோடு கடைசியாக 13-ஆவது இடத்தில் உள்ளது. நாா்த்ஈஸ்ட் அணி 10 ஆட்டங்களில் 3-ஆவது தோல்வி கண்டு, 15 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளது.

அடுத்ததாக, சனிக்கிழமை (நவ.30) நடைபெறும் இரு ஆட்டங்களில் மும்பை சிட்டி எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி, மோகன் பகான் - சென்னையின் எஃப்சி அணிகள் மோதுகின்றன.

X
Dinamani
www.dinamani.com