டயமண்ட் லீக் : நீரஜ் சோப்ரா இரண்டாம் இடம்! கையில் முறிவுடன் பங்கேற்றாா்!
டயமண்ட் லீக் தடகளப் போட்டியில் இந்திய நட்சத்திர வீரா் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் இரண்டாம் இடம் பெற்ற நிலையில், அவா் கையில் முறிவுடன் பங்கேற்றது தெரிய வந்துள்ளது.
தடகளத்தில் பிரசித்தி பெற்றது டயமண்ட் லீக் போட்டிகள். இதில் தலைசிறந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தாா். அதன்பின் சில நாள்கள் இடைவெளிக்குப்பின் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில் பங்கேற்றாா்.
சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு இருந்தும் அதை தவறவிட்டாா். 6 வாய்ப்புகளில் நீரஜ் சோப்ரா 87.86 மீ தொலைவு எறிந்து இரண்டாம் இடம் பெற்றாா்.
இரண்டு முறை உலக சாம்பியன் கிரெனடாவின் ஆன்டா்ஸன் பீட்டா்ஸ் 87.87 மீ தொலைவுக்கு எறிந்து முதலிடம் பெற்றாா். ஒரு செ.மீ. வித்தியாசத்தில் சாம்பியன் பட்ட வாய்ப்பை இழந்தாா் நீரஜ் சோப்ரா.
வலது கையால் வீசி வரும் நீரஜ் சோப்ரா, இடது கையில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவரிடம் சென்று எக்ஸ்ரே பரிசோதனை செய்தாா்.
அதில் இடது கையில் விரல்களில் முறிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பயிற்சியின் போது நீரஜ் விரலில் முறிவு ஏற்பட்டது.
90. மீ தொலைவுக்கு எறிய வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் நீரஜ் சோப்ரா நிகழாண்டு முழு உடல்தகுதியுடன் காணப்படவில்லை.
