பெர்லின்: ஜெர்மனியில் நடைபெற்ற லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனான உலக அணியை வீழ்த்தி, ஐரோப்பிய அணி 5-ஆவது முறையாக வாகை சூடியது.
இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில், முதலில் இரட்டையர் பிரிவில் ஐரோப்பியின் அணியின் கார்லோஸ் அல்கராஸ்/கேஸ்பர் ரூட் கூட்டணி 6-2, 7-6 (8/6) என்ற செட்களில் உலக அணியின் பென் ஷெல்டன்/ஃபிரான்சஸ் டியாஃபோ ஜோடியை வீழ்த்தியது.
பின்னர் ஒற்றையர் பிரிவுகளில், ஐரோப்பிய அணியின் டேனியல் மெத்வதெவ் 7-6 (8/6), 5-7, 7-10 என்ற கணக்கில் உலக அணியின் பென் ஷெல்டனிடம் தோல்வியைத் தழுவினார். 2-ஆவது ஒற்றையர் ஆட்டத்தில் ஐரோப்பிய அணியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-7 (5/7), 7-5, 10-5 என்ற
செட்களில் உலக அணியின் ஃபிரான்சஸ் டியாஃபோவை தோற்கடித்தார்.
கடைசி ஒற்றையர் ஆட்டத்தில் ஐரோப்பிய அணியின் கார்லோஸ் அல்கராஸ் 6-2, 7-5 என்ற செட்களில் உலக அணியின் டெய்லர் ஃப்ரிட்ûஸ வீழ்த்தினார். இதையடுத்து மொத்த புள்ளிகள் அடிப்படையில் ஐரோப்பிய அணி 13-11 என்ற கணக்கில் உலக அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இதற்கு முன் 2017, 18, 19, 21 ஆகிய ஆண்டுகளில் ஐரோப்பிய அணி கோப்பை வென்றிருக்கிறது. கடந்த 2022, 23-இல் உலக அணி வாகை சூடியுள்ளது.
லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியானது, கடந்த 2017 முதல் நடைபெறுகிறது. இதில் ஐரோப்பிய அணி, உலக அணி என இரு அணிகள் பங்கேற்கின்றன. ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் உள்ள போட்டியாளர்கள் ஐரோப்பிய அணியிலும், எஞ்சிய கண்டங்களைச் சேர்ந்த நாடுகளின் வீரர்கள் உலக அணியிலும் இடம் பெறுவர்.
நடப்பு எடிஷனில் ஐரோப்பிய அணியில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், நார்வேயின் கேஸ்பர் ரூட், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபஸ் ஆகியோர் இருந்தனர்.
உலக அணியில், அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ், ஃபிரான்சஸ் டியாஃபோ, பென் ஷெல்டன், சிலியன் அலெக்ஸாண்ட்ரோ டபிலோ, ஆர்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோ, ஆஸ்திரேலியாவின் தனாசி கோகினகிஸ் ஆகியோர் களம் கண்டனர்.
கடந்த 20-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு 3 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின் முடிவில் ஐரோப்பிய அணி சாம்பியனாகியுள்ளது.