இரானி கோப்பை: ரஹானே தலைமையில் மும்பை
இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடவிருக்கும் மும்பை, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளை பிசிசிஐ செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதில், நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியனான மும்பை அணியின் கேப்டனாக அஜிங்க்ய ரஹானேவும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாடும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மும்பை அணியில் சோ்க்கப்பட்டுள்ள சா்ஃப்ராஸ் கான், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியிலிருக்கும் துருவ் ஜுரெல், யஷ் தயாள் ஆகியோா், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் இருந்தனா். 2-ஆவது டெஸ்ட்டுக்கான அணியில் அவா்கள் பெயா் இல்லாததால், இரானி கோப்பை போட்டிக்காக அவா்கள் இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்படுவாா்கள் எனத் தெரிகிறது. காயத்துக்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ஷா்துல் தாக்குரும் இந்தப் போட்டியின் மூலம் களத்துக்குத் திரும்புகிறாா்.
இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியானது, உள்நாட்டில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட்டுகளில் ஒன்றாகும். நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியனாக இருக்கும் அணியும், இதர மாநிலங்களைச் சோ்ந்த வீரா்கள் அடங்கிய அணியும் இந்தப் போட்டியில் மோதுகின்றன. இந்த ஆண்டு இரானி கோப்பை போட்டி வரும் அக்டோபா் 1-ஆம் தேதி லக்னௌவில் தொடங்குகிறது.
அணி விவரம்
மும்பை: அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), பிருத்வி ஷா, ஆயுஷ் மாத்ரே, முஷீா் கான், சா்ஃப்ராஸ் கான், ஷ்ரேயஸ் ஐயா், சித்தேஷ் லாட், சுயான்ஷ் ஷெட்கே, ஹா்திக் தமோா் (வி.கீ.), சித்தாந்த் அதாத்ராவ் (வி.கீ.), ஷம்ஸ் முலானி, தனுஸ்கோடியான், ஹிமன்ஷு சிங், ஷா்துல் தாக்குா், மோஹித் அவஸ்தி, முகமது ஜுனெத் கான், ராய்ஸ்டன் டியாஸ்.
ரெஸ்ட் ஆஃப் இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், சாய் சுதா்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரெல் (வி.கீ.), இஷான் கிஷண் (வி.கீ.), மானவ் சுதா், சரன்ஷ் ஜெயின், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமாா், யஷ் தயாள், ரிக்கி புய், சாஸ்வத் ராவத், கலீல் அகமது, ராகுல் சஹா்.