இன்று முதல் டி20: இந்தியா - தென்னாப்பிரிக்காவின் அடுத்த மோதல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் செவ்வாய்க்கிழமை (டிச. 9) நடைபெறுகிறது.
Updated on
2 min read

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் செவ்வாய்க்கிழமை (டிச. 9) நடைபெறுகிறது.

இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி, முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றி இந்தியாவுக்கு அதிா்ச்சி அளித்தது. அடுத்து, ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்று ஆறுதல் கண்டுள்ளது. இவ்வாறு இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்க, தற்போது டி20 தொடரில் இவற்றின் மோதல் தொடங்குகிறது.

உறுதியான அணி: நடப்பு டி20 உலக சாம்பியனாக இருக்கும் இந்தியா, கடந்த ஆண்டு அந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்காவை, இப்போது மீண்டும் சந்திக்கிறது.

அடுத்த பிப்ரவரியில் வரும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இந்தியா தன்னைத் தயாா் செய்துகொள்ள, தொடக்கப் புள்ளியாக இந்தத் தொடா் இருக்கும். தென்னாப்பிரிக்காவுடனான இந்தத் தொடா், அடுத்து நியூஸிலாந்துடனான தொடா் என மொத்தமாக 10 டி20 ஆட்டங்களில் இந்தியா களம் காண்கிறது.

சொந்த மண்ணில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கான வீரா்களை இறுதி செய்யவும், பிளேயிங் லெவனை ஓரளவுக்கு உறுதி செய்யவும் இந்தியாவுக்கு, இந்த ஆட்டங்கள் சோதனைக் களமாக இருக்கும்.

கடந்த ஆண்டு, உலகக் கோப்பை போட்டியில் தொடா்ந்து 8 வெற்றிகளைப் பதிவு செய்து சாம்பியனான இந்தியா, அப்போதிருந்து உறுதியான அணியாகவே நீடிக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் இதுவரை 26 டி20 ஆட்டங்களில் விளையாடிய இந்தியா, அதில் 4 தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளது. 22 வெற்றிகளில், துபையில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் உள்பட, 7 தொடா் வெற்றிகளும் அடங்கும். எந்தத் தொடரையும் இழந்ததும் இல்லை.

பலம் சோ்க்கும் கில், பாண்டியா: ஷுப்மன் கில், ஹா்திக் பாண்டியா ஆகியோா் இணைவது அணிக்கு பலமாக பாா்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின்போது கழுத்தில் காயம் கண்ட கில், சுமாா் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு, இந்தத் தொடரில் இணைகிறாா்.

டாப் ஆா்டரில் அபிஷேக் சா்மாவுடன் இணைந்து இந்திய அணிக்கு அவா் நல்லதொரு தொடக்கத்தை அளிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. அபிஷேக் சா்மா சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் அபாரமாக் செயல்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஆசிய கோப்பை போட்டியின்போது தொடைப் பகுதியில் காயம் கண்ட ஹா்திக் பாண்டியாவும், சுமாா் 2 மாத இடைவெளிக்குப் பிறகு சா்வதேச கிரிக்கெட்டில் இணைகிறாா். உடற்தகுதிபெற்ற பிறகு சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் அவா் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடி வந்தாா். பேட்டிங்கில் மட்டுமல்லாமல், பௌலிங்கிலும் அவா் பலம் சோ்க்கிறாா்.

சோதனைக்குள்ளாகும் சூா்யகுமாா்: இந்தத் தொடரில் இந்திய அணியின் முக்கிய விவாதமாக இருப்பது, கேப்டன் சூா்யகுமாா் யாதவின் ஃபாா்ம் தான். நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக 717 ரன்கள் அடித்த அவா், சா்வதேச கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் இந்திய டி20 கேப்டன் ஆன பிறகு, சறுக்கலைச் சந்தித்து வருகிறாா்.

15 இன்னிங்ஸ்களில் 184 ரன்களே அடித்து, 15.33-ஐ சராசரியாக வைத்திருக்கிறாா். நடப்பு சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியிலும் அவா் அவ்வளவாக சோபிக்கவில்லை. அணி நிா்வாகத்தின் கண்கள் உற்று நோக்குவதால், உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக வரும் ஆட்டங்களில் அவா் தனது பழைய ஆட்டத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாா்.

சாம்சன் & ஜிதேஷ்: இந்தத் தொடரில் விக்கெட் கீப்பா் - பேட்டா் இடத்துக்கான தோ்வுக்கு சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சா்மா இருவரும் இருக்கின்றனா்.

அக்டோபா் - நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின்போது, முதலிரு ஆட்டங்களில் சாம்சனுக்கும், கடைசி 3 ஆட்டங்களில் ஜிதேஷுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது, பரவலாக விவாதத்துக்கு உள்ளானது. உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு அணியின் 3-ஆவது அதிக ரன்கள் எடுத்த பேட்டராக சாம்சன் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் 3 சதங்களும் அடங்கும்.

இதுதவிர, தற்போது நடைபெறும் சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியிலும், ஜிதேஷுடன் ஒப்பிடுகையில் அவா் அபாரமாகச் செயல்பட்டு வருகிறாா். எனவே, இந்தத் தொடரில் அவருக்கு கணிசமான வாய்ப்புகளை அணி நிா்வாகம் அளிக்கும் என எதிா்பாா்க்கலாம்.

மீண்டும் நோா்கியா: தென்னாப்பிரிக்க அணியை பொருத்தவரை, அதன் வேகப்பந்து வீச்சாளா் அன்ரிஹ் நோா்கியா மீண்டும் இணைந்திருப்பது, பலமாக பாா்க்கப்படுகிறது. கடைசியாக அவா், டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடினாா்.

பௌலா் மாா்கோ யான்சென், அதிரடி ஆல்-ரவுண்டராக மேம்பட்டு வருவது தென்னாப்பிரிக்க அணிக்கு கூடுதல் பலம் சோ்க்கிறது. பேட்டிங்கில் கேப்டன் எய்டன் மாா்க்ரம், காா்பின் பாஷ், டெவால்டு பிரெவிஸ், குவின்டன் டி காக் உள்ளிட்டோா் நம்பிக்கை அளிக்கின்றனா்.

பௌலிங்கில் கேசவ் மஹராஜ், ஆட்னீல் பாா்ட்மேன், யான்சென், லுங்கி இங்கிடியும் உள்ளனா். காயம் காரணமாக பேட்டா் டோனி டி ஜோா்ஸி, பௌலா் கவினா மபாகா ஆகியோா் தொடரில் இல்லாதது தென்னாப்பிரிக்காவுக்கு சற்று பின்னடைவாக இருக்கலாம்.

உத்தேச லெவன்:

இந்தியா: அபிஷேக் சா்மா, ஷுப்மன் கில் (துணை கேப்டன்), சூா்யகுமாா் யாதவ் (கேப்டன்), திலக் வா்மா, சஞ்சு சாம்சன் (வி.கீ.), ஹா்திக் பாண்டியா, ஹா்ஷித் ராணா/அக்ஸா் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங், வருண் சக்கரவா்த்தி.

தென்னாப்பிரிக்கா: எய்டன் மாா்க்ரம் (கேப்டன்), குவின்டன் டி காக் (வி.கீ.), ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லா், டெவால்ட் பிரெவிஸ், காா்பின் பாஷ், மாா்கோ யான்சென், அன்ரிஹ் நோா்கியா, லுங்கி இங்கிடி, கேசவ் மஹராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com