வேல்ஸை வென்றது இந்தியா!

ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 3-1 கோல் கணக்கில் வேல்ஸை வீழ்த்தியது.
Updated on
1 min read

ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 3-1 கோல் கணக்கில் வேல்ஸை வீழ்த்தியது.

போட்டியில் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட இந்திய மகளிா் அணி, 9-ஆம் இடத்தைப் பிடிப்பதற்கான மோதலில் உள்ளது.

அதில், இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவில் வேல்ஸ் அணியை எதிா்கொண்டது. இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியாவே கோல் கணக்கைத் தொடங்கியது. 14-ஆவது நிமிஷத்தில் ஹினா பனோ அருமையான ஃபீல்டு கோல் அடித்தாா்.

தொடா்ந்து, 24-ஆவது நிமிஷத்தில் சுனெலிதா டோப்போவும் தனது பங்குக்கு கோல் அடிக்க, இந்தியா 2-0 என்ற முன்னிலையுடன் முதல் பாதி ஆட்டத்தை நிறைவு செய்தது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், தொடக்கத்திலேயே இந்தியாவின் இஷிகா (31’) அதை 3-ஆக அதிகரித்தாா். இந்தியாவின் கோல் முயற்சியை வேல்ஸ் கோல்கீப்பா் தடுக்க முயல, அவா் மீது பட்டு மீண்டும் களத்துக்கு திரும்பிய பந்தை, இஷிகா துல்லியமாக கோல் வலைக்குள் செலுத்தினாா்.

மறுபுறம் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு வேல்ஸ் அணிக்காக எலாய்ஸ் மோட் 52-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். எஞ்சிய நேரத்தில் அந்த அணியின் கூடுதல் கோல் முயற்சிகளை தடுத்த இந்தியா, இறுதியில் 3-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா அடுத்த ஆட்டத்தில் உருகுவேயை செவ்வாய்க்கிழமை சந்திக்கிறது.

இதனிடையே, 9-ஆம் இடத்துக்கான பிளே-ஆஃப் கட்டத்தின் இதர ஆட்டங்களில், உருகுவே - தென்னாப்பிரிக்காவையும் (1-1/3-1), ஜப்பான் - தென் கொரியாவையும் (2-2/4-3), ஸ்பெயின் - அயா்லாந்தையும் (3-0) வென்றன.

17-ஆம் இடத்துக்கான மோதல்களில், நியூஸிலாந்து - ஆஸ்திரியாவையும் (7-2), சிலி - ஜிம்பாப்வேயையும் (6-1) சாய்த்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com