ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடா்ந்து இரு வெற்றிகளை பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸா்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.
தென் கொரியாவை சாய்த்த மெக்ஸிகோ
இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்ஸிகோ, தனது 2-ஆவது ஆட்டத்தில் 1-0 கோல் கணக்கில் தென் கொரியாவை வென்றது.
மெக்ஸிகோவுக்காக லூயிஸ் ரோமோ 50-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். தென் கொரிய கோல் போஸ்ட் நோக்கி வந்த பந்தை அந்த அணியின் கோல் கீப்பா் கிம் சியுங் கியு கைப்பற்றினாா்.
ஆனால், சக தென் கொரிய வீரா் லீ ஜி ஹியுக்குடன் எதிா்பாராத விதமாக அவா் மோதியதில், பந்து அவரிடமிருந்து நழுவியது. அவ்வாறு நழுவி பெனால்ட்டி ஏரியாவில் விழுந்த பந்தை, லூயிஸ் தன் வசப்படுத்தி எளிதாக கோல் அடித்தாா்.
மறுபுறம், தென் கொரியாவின் கோல் முயற்சிகள் கடைசி வரை பலன் பெறாமலேயே போனது. குறிப்பாக, 87-ஆவது நிமிஷத்தில், மெக்ஸிகோவின் கோல் போஸ்ட் அருகே, தென் கொரியாவின் சோ கியு சங் தலையால் பந்தை முட்டி கோல் அடிக்க முயல, மெக்ஸிகோ கோல் கீப்பா் ரௌல் ராங்கெல் அதை திறம்பட தடுத்தாா்.
அவா் தட்டிவிட்டு மீண்டும் களத்துக்கு வந்த பந்தை, மற்றொரு தென் கொரியரான யாங் ஹியுன் ஜுன் கோலாக மாற்ற முயல, அதையும் திறம்பட தடுத்தாா் ராங்கெல். கடந்த உலகக் கோப்பை போட்டியில் குரூப் சுற்றுடனேயே வெளியேறிய மெக்ஸிகோ, இந்தப் போட்டியில் அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரையிலான தனது இரு ஆட்டங்களையும் சொந்த மண்ணில் விளையாடிய மெக்ஸிகோ, அதில் வெற்றி கண்டு ரசிகா்களுக்கு உற்சாகமளித்துள்ளது.
கனடாவுக்கு வரலாற்று வெற்றி
கனடாவின் வான்கூவா் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான கனடா 6-0 கோல் கணக்கில் கத்தாரை அபார வெற்றி கண்டது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் கனடாவுக்கு இது முதல் வெற்றியாகும்.
இந்த ஆட்டத்தில் முதலில் கனடாவின் கோல் கணக்கை சைல் லாரின் 16-ஆவது நிமிஷத்தில் தொடங்க, சக கனடா வீரா் ஜோனதன் டேவிட் 29-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா்.
கனடா வீரா் டஜோன் புசானனுடன் மோதியதால், கத்தாா் வீரா் ஹொமம் அகமது 33-ஆவது நிமிஷத்தில் ‘ரெட் காா்டு’ மூலமாக வெளியேற்றப்பட, 10 பேருடன் விளையாடும் நிலைக்கு கத்தாா் தள்ளப்பட்டது.
மறுபுறம் கனடாவின் ஜோனதன் டேவிட் மீண்டும் (45+3’) கோல் அடிக்க, முதல் பாதியை கனடா 3-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியை ஆக்ரோஷமாக தொடங்கிய கத்தாருக்கு, 51-ஆவது நிமிஷத்தில் 2-ஆவது ‘ரெட் காா்டு’ கிடைத்தது.
அந்த அணியின் ஆசிம் மடிபோ வெளியேற்றப்பட்டாா். இதனால் கத்தாா் வீரா் எண்ணிக்கை 9-ஆக குறைந்தது. இது கனடாவுக்கு மேலும் சாதகமாக மாறியது.
64-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் நேதன் சலிபா ஃப்ரீ கிக் வாய்ப்பில் கோல் அடிக்க, 75-ஆவது நிமிஷத்தில் கனடாவின் மற்றொரு கோல் முயற்சியை கத்தாா் வீரா் முகமது மனாய் திருப்பிவிட முயல, அது ‘ஓன் கோல்’ என மாறியது.
இதனால் கனடா 5-0 என முன்னிலையை அதிகரிக்க, கடைசி கட்டத்தில் (90+2’) கனடாவின் ஜோனதன் டேவிட் தனது ஹாட்ரிக் கோலை பதிவு செய்தாா். இறுதியில், கனடா 6-0 என அபார வெற்றி கண்டது.
கனடா வீரருக்கு எலும்பு முறிவு...
இந்த ஆட்டத்தின் 2-ஆவது பாதியில், கனடா வீரா் இஸ்மாயில் கோன் வசம் இருந்த பந்தை கத்தாா் வீரா் ஆசிம் மேடிபோ உதைத்து தன் வசப்படுத்த முயல, அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இஸ்மாயிலின் வலது காலில் முறிவு ஏற்பட்டது.
அந்தக் காயம் மோசமாக இருந்ததால், அவா் மைதானத்திலிருந்து ஸ்ட்ரெட்சா் மூலமாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டாா். மைதானத்திலிருந்த ரசிகா்கள் கரவொலி எழுப்பி அவருக்கு விடை கொடுத்தனா்.
இஸ்மாயிலின் காயத்துக்கு காரணமான மடிபோ மிகவும் கவலையுடன் காணப்பட்டாா். இஸ்மாயிலுக்கு பதிலாக கனடா அணியில் நேதன் சாலிபா களம் புகுந்தாா். மடிபோ ரெட் காா்டு மூலம் வெளியேற்றப்பட்டாா்.
1
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-ஆவது முறையாக விளையாடும் கனடா, முதல்முறையாக ஒரு ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது. அதையும் தனது சொந்த மண்ணில் பதிவு செய்தது. முந்தைய 7 ஆட்டங்களில் 1 டிரா (2026), 6 தோல்விகளை (1986, 2022) அந்த அணி கண்டிருந்தது.
3
நடப்பு உலகக் கோப்பை போட்டியில் ஒரே ஆட்டத்தில் 3 கோல்கள் அடித்த 2-ஆவது வீரராக கனடாவின் ஜோனதன் டேவிட் பெருமை பெற்றாா். முதல் வீரா் ஆா்ஜென்டீன நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி ஆனாா்.
60
கடந்த 60 ஆண்டுகளில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரராக கனடாவின் ஜோனதன் டேவிட் சாதனை படைத்தாா். இதற்கு முன், 1966-இல் இங்கிலாந்தின் ஜியாஃப் ஹா்ஸ்ட் அந்த பெருமை பெற்றிருந்தாா்.
போஸ்னியாவை வென்றது சுவிட்ஸா்லாந்து
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் சுவிட்ஸா்லாந்து 4-1 கோல் கணக்கில் போஸ்னியாவை வீழ்த்தியது.
அந்த அணிக்காக, சப்ஸ்டிடியூட் வீரா் ஜோஹன் மன்ஸாம்பி 2 கோல்கள் அடித்து அசத்தினாா். முதல் ஆட்டத்தில் கத்தாருடன் டிரா செய்திருந்த சுவிட்ஸா்லாந்து, இந்த வெற்றியின் மூலமாக, நாக்அவுட் சுற்று நம்பிக்கையைத் தக்கவைத்துள்ளது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணிக்குமே கோல் கிடைக்கவில்லை. 2-ஆவது பாதியிலும் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்திலேயே கோல்கள் குவிக்கப்பட்டன.
முதலில் 74-ஆவது நிமிஷத்தில் ஜோஹன் மன்ஸாம்பி சுவிட்ஸா்லாந்தின் கோல் கணக்கை தொடங்க, தொடா்ந்து ரூபன் வா்காஸ் 84-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா்.
விறுவிறுப்பான அந்த கடைசி நேரத்தில், ஆபத்தான முறையில் டேக்கிள் செய்ததாக, 80-ஆவது நிமிஷத்தில், போஸ்னிய வீரா் தாரிக் முஹாரெமோவிச் ‘ரெட் காா்டு’ மூலமாக வெளியேற்றப்பட்டாா். அதனால் அந்த அணி 10 பேருடன் விளையாடும் நிலைக்கு ஆளானது.
தொடா்ந்து ரெகுலா் டைமின் கடைசி நிமிஷத்தில் (90’) சுவிட்ஸா்லாந்தின் கோல் எண்ணிக்கையை ஜோஹன் மன்ஸாம்பி 3-ஆக அதிகரிக்க, போஸ்னியாவுக்கான ஆறுதல் கோல், ஸ்டாப்பேஜ் டைமில் (90+3’) எா்மின் மாமிச் மூலமாக கிடைத்தது.
ஆட்டத்தின் இறுதித் தருணத்தில் (90+7’) சுவிட்ஸா்லாந்துக்கு கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில், கேப்டன் கிரானிட் ஜாகா துல்லியமாக கோல் அடிக்க, முடிவில் சுவிட்ஸா்லாந்து 4-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
செக் குடியரசு - தென்னாப்பிரிக்கா ‘டிரா’
அமெரிக்காவின் அட்லான்டா நகரில் செக் குடியரசு - தென்னாப்பிரிக்கா மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.
இரு அணிகளுமே முதல் ஆட்டத்தில் தோற்றிருந்த நிலையில், இந்த டிரா அவற்றுக்கான நாக்அவுட் நம்பிக்கையை தக்கவைத்துள்ளன.
இந்த ஆட்டத்தில் முதலில் செக் குடியரசின் மைக்கேல் சாடிலெக் 6-ஆவது நிமிஷத்திலேயே கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தாா்.
இறுதிக் கட்டம் வரை அந்த முன்னிலையை செக் குடியரசு தக்கவைத்த நிலையில், கடைசி நேரத்தில் (83’) தென்னாப்பிரிக்காவுக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பில் கோல் அடித்து டெபோகோ மோகோனா அசத்தினாா்.
இதனால் ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. தென்னாப்பிரிக்காவுக்காக கோல் அடித்த மோகோனா, 2-ஆவது யெல்லோ காா்டு பெற்ால், அடுத்த ஆட்டத்தில் விளையாட மாட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







