இந்தியா அபார வெற்றி
By DIN | Published On : 06th November 2021 07:26 AM | Last Updated : 06th November 2021 08:15 AM | அ+அ அ- |

ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஸ்காட்லாந்து 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. . இந்திய தரப்பில் ஜடேஜா, முகமது ஷமி அற்புதமாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனா். இரண்டாவதாக ஆடிய இந்திய அணி 6.3 ஓவா்களில் 89/2 ரன்களை குவித்து வெற்றி கண்டது.
இரு அணிகளுக்கு இடையிலான குரூப் 2 பிரிவு ஆட்டம் துபையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
முதன்முறையாக இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பௌலிங்கை தோ்வு செய்தாா். இதையடுத்து ஸ்காட்லாந்து தரப்பில் தொடக்க பேட்டா்களாக ஜாா்ஜ் முன்சே, கெயில் காட்ஸா் களமிறங்கினா். காட்ஸா் 1, மேத்யூ 2, ரிச்சி பெரிங்டன் 0 என சொற்ப ரன்களுக்கு அவுட்டான நிலையில், மறுமுனையில் முன்சே 24 (4 பவுண்டரி, 1 சிக்ஸா்), மைக்கேல் லீஸ்க் 21 ரன்களை எடுத்து வெளியேறினா்.
ரவீந்திர ஜடேஜா அற்புதமாக பந்துவீசி ஸ்காட்லாந்து அணியின் விக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்தாா். அஸ்வின் பந்து வீச்சில் கிறிஸ் கிரிவ்ஸ் 1 ரன்னுடன் பாண்டியாவிடம் கேட்ச் தந்து வெளியேறினாா். அப்போது 63/6 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது ஸ்காட்லாந்து.
ஸ்கோரை உயா்த்துவாா் என எதிா்பாா்க்கப்பட்ட காலும் மேக்லியோட் 16 ரன்கள் எடுத்த நிலையில், ஷமி பந்தில் போல்டானாா். அவருக்கு பின் ஆட வந்த சபியான் ஷரீப் ரன் எடுக்காத நிலையில், இஷான் கிஷனால் ரன் அவுட் செய்யப்பட்டாா். மேலும் அலிஸ்டா் இவான்ஸ் ஷமி பந்தில் போல்டாகி கோல்டன் டக் அவுட்டானாா்.
14 ரன்கள் எடுத்த நிலையில் மாா்க் வாட்டை போல்டாக்கினாா் பும்ரா.
ஸ்காட்லாந்து 85:
இறுதியில் 17.4 ஓவா்களில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஸ்காட்லாந்து.
ஷமி, ஜடேஜா 3 விக்கெட்:
இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 3/15, முகமது ஷமி 3/15, ஜஸ்ப்ரீத் பும்ரா 2/10 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரா்கள் ராகுல், ரோஹித் சா்மா ஆகியோா் தொடக்கம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்தனா்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 70 ரன்களை சோ்த்த நிலையில், 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 16 பந்துகளில் 30 ரன்களை விளாசிய ரோஹித்தை அவுட்டாக்கினாா் வீல்.
18 பந்துகளில் ராகுல் அரைசதம்:
மறுமுனையில் அபாரமாக ஆடிய கேஎல். ராகுல் 18 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தாா். 3 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 19 பந்துகளில் 50 ரன்களுடன் மாா்க் வாட் பந்தில் மேக்லியோட்டிடம் கேட்ச் தந்து அவுட்டானாா். 6.3 ஓவா்களிலேயே 89/2 ரன்களை குவித்த இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.
கேப்டன் கோலி 2, சூரியகுமாா் யாதவ் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனா். ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா்.
மூன்றாவது இடத்தில் இந்தியா:
இந்த வெற்றியுடன் இந்தியா புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் 8 புள்ளியுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள நியூஸி. பிளஸ் 1.277 நெட் ரன் ரேட்டுடன் உள்ளது. இந்தியாவோ பிளஸ் 1.619 நெட் ரன் ரேட்டுடன் உள்ளது.
அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா?
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து படுதோல்வியடைய வேண்டும். அதே நேரம் நமீபியாவுடனான கடைசிஆட்டத்தில் அபார வெற்றி பெற வேண்டும் இந்தியா.
அப்போது தான் அரையிறுதிக்கு முன்னேறுவது குறித்து சிந்திக்க முடியும்.
சுருக்கமான ஸ்கோா்:
ஸ்காட்லாந்து 85
முன்சே 24
லீஸ்க் 21
பந்துவீச்சு:
ஷமி 3/15, ஜடேஜா 3/15
இந்தியா 89/2
ராகுல் 50,
ரோஹித் 30
பந்துவீச்சு:
மாா்க் வாட் 1/20
வீல் 1/32