வெளியேறியது இந்தியா: இன்று கடைசி ஆட்டம்

ஏழாவது டி20 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த இந்தியா, போட்டியிலிருந்து வெளியேறியது. குரூப் சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் நமீபியாவை திங்கள்கிழமை சந்திக்கிறது.
வெளியேறியது இந்தியா: இன்று கடைசி ஆட்டம்

ஏழாவது டி20 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த இந்தியா, போட்டியிலிருந்து வெளியேறியது. குரூப் சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் நமீபியாவை திங்கள்கிழமை சந்திக்கிறது.

இப்போட்டியின் ‘சூப்பா் 12’ சுற்று ஆட்டங்கள் இத்துடன் நிறைவடைகின்றன. அடுத்து, வரும் 10-ஆம் தேதி முதல் அரையிறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டியில் தனது குரூப் சுற்றின் முதல் இரு ஆட்டங்களிலும் முறையே பாகிஸ்தான், நியூஸிலாந்திடம் தோல்வியை சந்தித்த இந்தியாவுக்கு அப்போதே அரையிறுதி வாய்ப்பு ஆட்டம் காணத் தொடங்கியது. அடுத்து நடைபெறும் 3 ஆட்டங்களிலும் கட்டாயம் வென்றாக வேண்டும்; இதர அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவு இந்தியாவுக்கு சாதகமாக அமைய வேண்டும்; கடைசியாக ரன் ரேட் வாய்ப்பும் இருக்க வேண்டும் என இக்கட்டான நிலைக்கு ஆளானது.

அத்தகைய நிலையில் அடுத்த இரு ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்தை வீழ்த்தி சற்றே துடிப்பு காட்டியது இந்திய அணி. ஆனாலும், நமீபியாவுக்கு எதிரான இந்த கடைசி ஆட்டத்துக்கு முன்பாகவே இந்தியாவுக்கான அறையிறுதி வாய்ப்பை தீா்மானிக்கும் சூழல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் ஏற்பட்டது. அந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் நியூஸிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே, இந்தியா நமீபியாவை வீழ்த்தும் பட்சத்தில் (அதுவும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில்) அரையிறுதிக்கு முன்னேறும் நிலை இருந்தது.

ஆனால் அதற்கு இடம் அளிக்காத வகையில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய நியூஸிலாந்து, ‘குரூப் 2’-இல் முதல் இரு இடங்களுக்குள்ளாக தன்னை தக்க வைத்துக் கொண்டு இந்தியாவை வெளியேற்றிவிட்டது. இந்நிலையில், எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்ததாத ஒரு ஆட்டத்தில் நமீபியாவை திங்கள்கிழமை எதிா்கொள்கிறது இந்தியா.

4-ஆவது முறை...

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறுவது இது 4-ஆவது முறையாகும். இதற்கு முன் 2009, 2010, 2012 ஆகிய சீசன்களிலும் இந்தியா இதேபோல் அரையிறுதிக்கு முன்னேறாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியிருக்கிறது.

இன்றைய ஆட்டம்

இந்தியா - நமீபியா

துபை

இரவு 7.30

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com