மொயீன் அலி அரைசதம்: நியூசிலாந்துக்கு 167 ரன்கள் இலக்கு
By DIN | Published On : 10th November 2021 09:18 PM | Last Updated : 10th November 2021 09:18 PM | அ+அ அ- |

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக இந்த ஆட்டத்தில் ஜாஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர்.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி அதிரடிக்கு இடம் கொடுக்கவில்லை. இதனால், திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டோவ் 17 பந்துகளில் 13 ரன்களுக்கு ஆடம் மில்ன் பந்தில் ஆட்டமிழந்தார்.
சுழற்பந்தவீச்சு அறிமுகப்படுத்தியவுடன் பட்லரும் 29 ரன்களுக்கு ஈஷ் சோதி சுழலில் வீழந்தார்.
இதன்பிறகு, டேவிட் மலான் மற்றும் மொயீன் அலி பாட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இணை படிப்படியாக அதிரடிக்கு மாறத் தொடங்கியது. இதனால், ரன் ரேட்டும் ஓவருக்கு 7.5-ஐ தாண்டத் தொடங்கியது. 3-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த நிலையில் மலான் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்து 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொயீன் அலி கடைசி ஓவரில் அரைசதத்தை எட்டி 37 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதி, ஆடம் மில்ன், ஈஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.