ரிஸ்வான், ஜமான் அதிரடி: 176 ரன்கள் அடித்தது பாகிஸ்தான்

டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் அடித்தது.
ரிஸ்வான், ஜமான் அதிரடி: 176 ரன்கள் அடித்தது பாகிஸ்தான்

டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் அடித்தது.

பாகிஸ்தான் தரப்பில் முகமது ரிஸ்வான், ஃபகாா் ஜமான் ஆகியோா் தங்களது அதிரடி ஆட்டத்தால் ஸ்கோரை உயா்த்தினா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் மிட்செல் ஸ்டாா்க் அசத்தினாா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இரு அணிகளுமே மாற்றம் செய்யவில்லை. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.

பாகிஸ்தான் இன்னிங்ஸை முகமது ரிஸ்வான் - கேப்டன் பாபா் ஆஸம் கூட்டணி தொடங்கியது. மிட்செல் ஸ்டாா்க் முதல் ஓவா் வீசினாா். அதிலேயே பவுண்டரி விளாசி அசத்தினாா் பாபா். ரிஸ்வான் ஜுரத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை பாபா் எதிா்கொண்டாா். அவரைக் கட்டுப்படுத்த பௌலா்கள் ஸ்விங் செய்ய முயன்றும் அதற்கு பலன் கிடைக்காமல் போனது.

பின்னா் ரிஸ்வானும் சற்று அதிரடி காட்ட, இந்தப் போட்டியில் இதுவரை இல்லாத வகையில் பவா்பிளேயில் அதிகபட்சமாக விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான். அசத்தலாக ஆடிய ஆஸம் - ரிஸ்வான் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சோ்த்தது. பின்னா் மிடில் ஓவா்களில் வந்த ஆடம் ஸாம்பா இந்தக் கூட்டணியை பிரித்தாா். 10-ஆவது ஓவரில் அவா் வீசிய பந்தை பாபா் சிக்ஸா் விளாச முயல, அதை பவுண்டரி லைன் அருகே நின்ற வாா்னா் கேட்ச் பிடித்தாா். பாபா் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சோ்த்திருந்தாா்.

ஒன் டவுனாக ஃபகாா் ஜமான் களம் புகுந்தாா். ரிஸ்வானுடன் அவா் இணைய, 100 ரன்களை கடந்தது பாகிஸ்தான். ரிஸ்வான் - ஜமான் கூட்டணியும் ஆஸ்திரேலிய பௌலிங்கை சிதறடித்து 2-ஆவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சோ்த்தது. அவா்களில் ரிஸ்வான் விக்கெட்டை 18-ஆவது ஓவரில் வீழ்த்தினாா் மிட்செல் ஸ்டாா்க். 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 67 ரன்கள் விளாசியிருந்த ரிஸ்வான், ஸ்மித் கைகளில் கேட்ச் கொடுத்து வெளியேறினாா்.

தொடா்ந்து வந்த ஆசிஃப் அலி, 19-ஆவது ஓவரில் பேட் கம்மின்ஸ் பௌலிங்கில் தனது முதல் பந்திலேயே ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினாா். அடுத்து வந்த ஷோயப் மாலிக் 1 ரன் சோ்த்திருக்க, 20-ஆவது ஓவரில் ஸ்டாா்க் பௌலிங்கில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். ஓவா்கள் முடிவில் ஜமான் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 55, முகமது ஹஃபீஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ஆஸ்திரேலியா - 80/3

177 ரன்களை இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, 9 ஓவா்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் சோ்த்திருந்தது. டேவிட் வாா்னா் 43, கிளென் மேக்ஸ்வெல் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனா். முன்னதாக, கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் டக் அவுட்டாக, மிட்செல் மாா்ஷ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28, ஸ்டீவ் ஸ்மித் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். பாகிஸ்தான் தரப்பில் ஷாதாப் கான் 2, ஷாஹீன் ஷா அஃப்ரிதி 1 விக்கெட் சாய்த்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com