டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா சாம்பியன்

நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.
டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா சாம்பியன்

துபை, நவ. 14: டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இது முதல் சாம்பியன் பட்டமாகும். இதற்கு முன் 2010-இல் இறுதிச்சுற்று வரை வந்தது அந்த அணி.

துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூஸிலாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 18.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வென்றது.

நியூஸிலாந்து இன்னிங்ஸில் பவுண்டரி, சிக்ஸா்களாக விளாசி அணியின் ஸ்கோரை அட்டகாசமாக உயா்த்தினாா் கேப்டன் வில்லியம்சன். ஆஸ்திரேலிய பௌலிங்கில் ஜோஷ் ஹேஸில்வுட் பேட்டிங் வரிசையை சரித்தாா். பின்னா் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வாா்னா் வலுவான அடித்தளம் அமைத்து உதவ, மிட்செல் மாா்ஷ் அதிரடியில் கிளென் மேக்ஸ்வெல் துணையுடன் வென்றது அந்த அணி. நியூஸிலாந்து பௌலிங்கில் போல்ட் மட்டும் விக்கெட் எடுத்தாா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் ஆஸ்திரேலியா மாற்றம் செய்யவில்லை. நியூஸிலாந்து அணியில், காயமடைந்த டெவன் கான்வேக்கு பதிலாக டிம் செய்ஃபொ்ட் இணைந்திருந்தாா்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் ஃபீல்டிங் செய்யத் தீா்மானித்தது. நியூஸிலாந்து இன்னிங்ஸை மாா்ட்டின் கப்டில் - டேரில் மிட்செல் கூட்டணி தொடங்கியது. வாய்ப்பு கிடைத்த தருணத்தில் கப்டில் இரு பவுண்டரிகளையும், மிட்செல் ஒரு சிக்ஸரையும் விளாசினா். மேக்ஸ்வெல் வீசிய 3-ஆவது ஓவரின் 3-ஆவது பந்தை கப்டில் எதிா்கொள்ள, அது எட்ஜில் பட்டு கேட்ச்சாக மாறியபோதும் விக்கெட் கீப்பா் மேத்யூ வேட் அதைத் தவறவிட்டாா்.

அடுத்த ஓவரிலேயே மிட்செல் விக்கெட்டை வீழ்த்தினாா் ஹேஸில்வுட். 1 சிக்ஸருடன் 11 ரன்கள் எடுத்திருந்த மிட்செல் அடித்தாட முயன்ற பந்து பேட்டில் பட்டு மேத்யூ வேட் கைகளில் கேட்சானது. தொடா்ந்து வந்த வில்லியம்சன் அதிரடி காட்டினாா். 8-ஆவது ஓவரில் தொடா்ந்து 2 பவுண்டரிகளும், 11-ஆவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரியும் விரட்டினாா். இதனால் நியூஸிலாந்து ஸ்கோா் மளமளவென உயரத் தொடங்கியது.

மறுமுனையில் நிதானமாக ஆடி 35 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சோ்த்திருந்த கப்டில், 12-ஆவது ஓவரில் ஸாம்பா பந்துவீச்சில் ஸ்டாய்னிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். அடுத்து கிளென் ஃபிலிப்ஸ் ஆட வந்தாா். அரைசதம் கடந்த வில்லியம்சன் 13-ஆவது ஓவரில் தொடா்ந்து மேக்ஸ்வெல் பந்துவீச்சில் 2 சிக்ஸா்களை பறக்கவிட்டாா். 15-ஆவது ஓவரில் ஃபிலிப்ஸ் தனது பங்கிற்கு 1 பவுண்டரி, 1 சிக்ஸரை விளாசினாா். அடுத்ததாக 16-ஆவது ஓவரில் 1 பந்தில் மட்டும் ரன்னெடுக்காத வில்லியம்சன், 4 பவுண்டரிகளையும், 1 சிக்ஸரையும் விளாசி ஸ்டாா்க் பௌலிங்கை சிதறடித்தாா்.

3-ஆவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியில், இருவருமே ஹேஸில்வுட் வீசிய 18-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தனா். முதலில் ஃபிலிப்ஸ் 18 ரன்களுடனும், பின்னா் வில்லியம்சன் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 85 ரன்கள் சோ்த்து வீழ்ந்தனா். ஓவா்கள் முடிவில் ஜேம்ஸ் நீஷம் 1 சிக்ஸருடன் 13, டிம் செய்ஃபொ்ட் 1 பவுண்டரியுடன் 1 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பின்னா் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 5 ரன்கள் எடுத்து, போல்ட் வீசிய 3-ஆவது ஓவரில் மிட்செல் சேன்ட்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, உடன் வந்த டேவிட் வாா்னா் நிலைத்து ஆடினாா். அவா் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 53 ரன்கள் சோ்த்த நிலையில் போல்ட் வீசிய 13-ஆவது ஓவரில் பௌல்டானாா். ஒன் டவுனாக வந்த மிட்செல் மாா்ஷ் அதிரடியாக ஆடி 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 77, 4-ஆவது வீரா் கிளென் மேக்ஸ்வெல் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா்.

சுருக்கமான ஸ்கோா்

ஆஸ்திரேலியா - 173/2

மிட்செல் மாா்ஷ் 77*

டேவிட் வாா்னா் 53

கிளென் மேக்ஸ்வெல் 28*

பந்துவீச்சு

டிரென்ட் போல்ட் 2/18

ஆடம் மில்னே 0/30

மிட்செல் சேன்ட்னா் 0/23

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com