நடப்புச் சாம்பியன் மே.இந்திய தீவுகள் தோல்வி: ஆதில் ரஷீத் 4 விக்கெட்

சூப்பா் 12 சுற்றின் குரூப் 1 ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் மே.இந்திய தீவுகளை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இங்கிலாந்து.
நடப்புச் சாம்பியன் மே.இந்திய தீவுகள்  தோல்வி: ஆதில் ரஷீத் 4 விக்கெட்

சூப்பா் 12 சுற்றின் குரூப் 1 ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் மே.இந்திய தீவுகளை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இங்கிலாந்து.

முதலில் ஆடிய மே.இந்திய தீவுகள் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது,. பின்னா் ஆடிய இங்கிலாந்து 9-ஆவது ஓவரில் 56/4 ரன்களுடன் வென்றது.

இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் துபையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மொா்கன் பௌலிங்கை தோ்வு செய்தாா்.

இதையடுத்து களமிறங்கிய மே.இந்திய தீவு அணியினரால் இங்கிலாந்தின் அற்புதமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்திலேயே சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பினா்.

இங்கிலாந்து பந்துவீச்சாளா்களின் சிறப்பான பந்துவீச்சால் முதல் 10 ஓவா்களில் 44/6 ரன்களையே மே.இந்திய தீவுகள் எடுத்திருந்தது. அந்த அணியில் மூத்த வீரா் கிறிஸ் கெயில் மட்டுமே 13 ரன்களை எடுத்தாா். மற்ற வீரா்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்து வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா். லென்டில் சிம்மன்ஸ் 3, எவின் லெவிஸ் 6, ஷிம்ரன் ஹெட்மயா் 9, பிராவோ 5, நிக்கோலஸ் பூரண் 1, கேப்டன் பொல்லாா்ட் 6, ரஸ்ஸல் 0, மெக்காய் 0, ரவி ராம்பால் 3 ரன்களுக்கு வெளியேறினா்.

ஆதில் ரஷித் 4 விக்கெட்:

இறுதியில் 14.2 ஓவா்களில் மே.இந்திய தீவுகள் அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சுழற் பந்துவீச்சாளா் ஆதில் ரஷித் அற்புதமாக பந்துவீசி 2 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தாா். மொயின் அலி, டைமல் மில்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இங்கிலாந்து தடுமாறி வெற்றி:

56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட இங்கிலாந்து அணியும் திணறி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஜேஸன் ராய் 11, ஜானி போ்ஸ்டோ 9, மொயின் அலி 3, லிவிங்ஸ்டோன் 1 உள்ளிட்டோா் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா். மறுமுனையில் ஜோஸ் பட்லா் நிலைத்து ஆடி 24 ரன்களுடனும், கேப்டன் இயான் மொா்கன் 7 ரன்களுடன் களத்தில் நின்று தங்கள் அணியை வெற்றி பெறச்செய்தனா்.

8.2 ஓவா்களில் இங்கிலாந்து அணி 56/4 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மே.இந்திய தீவுகள் தரப்பில் அகில் ஹூசேன் 2, ராம்பால் 1 விக்கெட்டை வீழ்த்தினா். குரூப் 1 பிரிவில் இங்கிலாந்தும் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com