டி காக் விலகல்: 'கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம்' விவகாரம் காரணமா?

டி காக்கை பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள்...
டி காக் விலகல்: 'கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம்' விவகாரம் காரணமா?

கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க மறுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல வீரர் டி காக் விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. சொந்தக் காரணங்களுக்காக இந்த ஆட்டத்திலிருந்து பிரபல வீரர் டி காக் விலகியுள்ளதாக தெ.ஆ. அணி கேப்டன் பவுமா தெரிவித்தார். இது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு அனைத்து தெ.ஆ. கிரிக்கெட் வீரர்களும் ஒரேவிதமாக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என தெ.ஆ. கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி காக் விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஜாா்ஜ் ஃபிளாய்டை காவலர்கள் கடந்த வருடம் கைது செய்தனா். அப்போது, ஃபிளாய்டின் கழுத்துப் பகுதியில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஃபிளாய்ட் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நாட்டில் வெள்ளை இனத்தைச் சோ்ந்த காவல் துறையினரால் கருப்பினத்தைச் சோ்ந்தவா்கள் தொடா்ச்சியாகக் கொல்லப்படுவது சா்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், நிராயுதபாணியாக இருந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் போலீஸாரின் இரக்கமற்ற தன்மை காரணமாக உயிரிழந்ததற்கு கருப்பின உரிமை ஆா்வலா்கள், மனித உரிமை அமைப்பினா்கள் ஆகியோா் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்ததைக் கண்டித்து அமெரிக்கா முழுவதும் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிறவெறி எதிா்ப்பு ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்ததைக் கண்டித்தும் கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற வாசகத்தை முன்வைத்தும் அமெரிக்கா முழுவதும் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிறவெறி எதிா்ப்பு ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நாம் அனைவருமே மனிதர்கள். கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கம் என்பது வெள்ளையர்களைக் கருப்பர்கள் முந்திச் செல்வதற்காகத் தொடங்கப்பட்டது அல்ல. அதன் நோக்கமே சமத்துவத்தை நிலைநாட்டுவதுதான் என்று இனப்பாகுபாடு குறித்து விரிவாகப் பேட்டியளித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பாராட்டுகளைப் பெற்றார் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங். 

இதையடுத்து முக்கியமான கிரிக்கெட் ஆட்டங்களில் கிரிக்கெட் வீரர்கள் சில நொடிகள் மண்டியிட்டு கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கத்துக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள். சில ஆட்டங்களில் இரு அணி கிரிக்கெட் வீரர்களும் பயிற்சியாளர்களும் மட்டுமல்லாமல் நடுவர்களும் ஒரு சில நொடிகள் மண்டியிட்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள். வீரர்கள் ஆடுகளத்திலும் பயிற்சியாளர்களும் இதர ஊழியர்களும் எல்லைக் கோட்டுக்கு அருகேயும் தங்கள் செயல்களை வெளிப்படுத்தினார்கள். கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்தும் கிரிக்கெட் ஆட்டங்களில் வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள். 

டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் இந்திய அணி உள்பட பல அணிகள் ஆடுகளத்தில் சில நொடிகள் மண்டியிட்டும் வேறு விதங்களிலும் கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள். துபையில் இன்று நடைபெற்று வரும் மே.இ. தீவுகள் - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஒரேவிதமாக அனைத்து வீரர்களும் சில நொடிகள் மண்டியிட்டு கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியிருந்தது. அனைத்து ஆட்டங்களிலும் வீரர்கள் ஒற்றுமையுடன் இதைச் செய்யவேண்டும் எனக் கூறியிருந்தது. அதேபோல ஆட்டம் தொடங்கும் முன்பு இரு அணி வீரர்கள் சில நொடிகள் மண்டியிட்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள். இதற்கு முன்பு தென்னாப்பிரிக்க வீரர்கள் அனைவரும் இதுபோல மண்டியிட்டு ஆதரவு தெரிவித்தது கிடையாது. மேற்கிந்தியத் தீவுகளில் தெ.ஆ. அணி சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது மூன்று விதமாக தெ.ஆ. வீரர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். அப்போது டி காக் தன்னுடைய ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக எந்தச் செயலையும் செய்யவில்லை.

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் எதிர்பாராதவிதமாக டி காக் விலகியுள்ளார். தெ.ஆ. கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையால் அதிருப்தி அடைந்து, கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்க முடியாத காரணத்தால் இந்த ஆட்டத்திலிருந்து அவர் விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டி காக்கை பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள். எனினும் இதுகுறித்த தன் நிலைப்பாட்டை டி காக் விரைவில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com