முகப்பு விளையாட்டு டி20 உலகக் கோப்பை
இலங்கை போராட்டம் வீண்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி
By DIN | Published On : 28th October 2021 11:08 PM | Last Updated : 28th October 2021 11:08 PM | அ+அ அ- |

டி20 உலகக் கோப்பை: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பையின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இலங்கைக்கு பதும் நிசன்கா சரியான தொடக்கம் தராமல் 7 ரன்களுக்கு பாட் கம்மின்ஸ் வேகத்தில் வீழ்ந்தார். ஆனால், சாரித் அசலங்கா மற்றும் குசால் பெரேரா பவர் பிளேவில் அதிரடி காட்டி ரன் ரேட்டை உயர்த்தினார்.
ஆனால், நடு ஓவர்களில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தியது. பெரேரா மற்றும் அசலங்கா தலா 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற பனுகா ராஜபட்ச மட்டும் இறுதியில் சற்று அதிரடி காட்டி ஸ்கோரை உயர்த்தினார்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் டேவிட் வார்னர் 42 பந்துகளுக்கு அரைசதம் கடந்து 65 ரன்களை குவித்தார். ஆரோன் பிஞ்ச் 37 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 28 ரன்களையும் எடுத்தனர்.
மேக்ஸ்வெல் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தாலும், வார்னரின் அரை சதம் வீணாகாத வகையில், ஸ்டீவன் ஸ்மித், மார்கஸ் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்றனர்.
இதனால் 17 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.