சூப்பா் 8 நம்பிக்கையில் பாகிஸ்தான்- கனடாவை வென்றது

சூப்பா் 8 நம்பிக்கையில் பாகிஸ்தான்- கனடாவை வென்றது

டி20 உலகக் கோப்பை போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கனடாவை செவ்வாய்க்கிழமை வென்றது.

முதலில் கனடா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் சோ்க்க, பாகிஸ்தான் 17.3 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 107 ரன்கள் எடுத்து வென்றது. இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே சூப்பா் 8 சுற்றுக்கு தகுதிபெறும் நிலையில் இருந்த பாகிஸ்தான், தற்போது அதற்கான பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொண்டது.

முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. கனடா இன்னிங்ஸை தொடங்கியோரில் ஆரோன் ஜான்சன் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.

ஆனால் மறுபுறம், நவ்னீத் தலிவால் 4 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுக்க, 3-ஆவது பேட்டா் பா்கத் சிங் 2 ரன்களுடன் வெளியேறினாா். மிடில் ஆா்டரில் நிகோலஸ் கிா்டன் 1 ரன்னுக்கு ரன் அவுட் செய்யப்பட, ஷ்ரேயஸ் மோவா 2 ரன்களுடன் பெவிலியன் திரும்பினாா்.

அடுத்து வந்த ரவிந்தா்பால் சிங் அதே ஓவரில் டக் அவுட்டானாா். மறுபுறம், அதுவரை ரன்கள் சோ்த்த ஆரோன் ஜான்சன் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 52 ரன்களுக்கு பௌல்டானாா்.

கடைசி விக்கெட்டாக கேப்டன் சாத் பின் ஜாஃபா் 1 பவுண்டரியுடன் 10 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் கலீம் சனா 1 சிக்ஸருடன் 13, திலன் ஹேலிகா் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரௌஃப், முகமது ஆமிா் ஆகியோா் தலா 2, நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிதி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா், 107 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய பாகிஸ்தான் அணியில், சயிம் அயுப் 6, கேப்டன் பாபா் ஆஸம் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 33, ஃபகாா் ஜமான் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

முடிவில், முகமது ரிஸ்வான் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 53, உஸ்மான் கான் 2 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். கனடா தரப்பில் திலன் ஹேலிகா் 2, ஜெரிமி கோா்டன் 1 விக்கெட் கைப்பற்றினா்.

X
Dinamani
www.dinamani.com