சென்னை, டிச. 4: தமிழகத்தில் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை நேரில் பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை அளிக்க தனித்தனி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தரும் அறிக்கைகள் குறித்து, டிசம்பர் 7-ல் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
மழைக்குப் பலியானோரின் எண்ணிக்கை 130-ஐ தாண்டியுள்ளது. பயிர்ச் சேதமும் லட்சக்கணக்கில் இருக்கும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நிவாரண நிதி, உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே, பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளைப் பார்வையிட மாவட்ட வாரியாக அரசுத் துறை உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மழை சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து உடனடி நிவாரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியுள்ளது.
பயிர், சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்து உடனடியாக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அரசுத் துறை உயரதிகாரிகள் தனித்தனியே நியமிக்கப்பட்டுள்ளனர்.
யார் யார்? தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறை மேலாண் இயக்குநராக உள்ள ககன் தீப்சிங் பேடி கடலூர் மாவட்டத்துக்கும், தமிழ்நாடு மருந்துகள் சேவைக் கழகத்தின் மேலாண் இயக்குநராக உள்ள சிவதாஸ் மீனா நாகை மாவட்டத்துக்கும், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளராக உள்ள வி.கே. சுப்புராஜ் தஞ்சை மாவட்டத்துக்கும், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறையின் செயலாளராக உள்ள ஜி. சந்தானம் திருவாரூர் மாவட்டத்துக்கும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் செயலாளர் எஸ்.எஸ்.ஜவஹர் விழுப்புரம் மாவட்டத்துக்கும், திட்டம், வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் சுர்ஜித் சௌத்ரி தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கும், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் டேவிதார் புதுக்கோட்டை மாவட்டத்துக்கும், தொழிலாளர் நலத் துறை ஆணையாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா ராமநாதபுரம் மாவட்டத்துக்கும் மேற்பார்வை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அறிக்கை எப்போது? இந்த அதிகாரிகள் டிசம்பர் 5, 6 ஆகிய நாள்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வர். பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு முறையாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும், பாதுகாப்பான இடங்களில் தாற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு செய்யப்படும் உணவு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்வர்.
மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பு, அவற்றுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகை, சாலைகள், நீர் நிலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தாற்காலிகமாக சீர் செய்யவும், நிரந்தரமாக சீரமைக்கவும் தேவையான நிதி ஆதாரத்தை மதிப்பீடு செய்து அரசுக்கு உடனடியாக அறிக்கை தரக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
டிசம்பர் 7-ல் அமைச்சரவைக் கூட்டம்: இதைத் தொடர்ந்து, மழை பாதிப்பு குறித்து ஆராய டிசம்பர் 7-ம் தேதி மாலையில் அமைச்சரவையின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் தரும் அறிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்து தேவையான முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும் என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.