திருச்சி, டிச. 4: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திங்கள்கிழமை (டிச.6) தொடங்குகிறது. டிசம்பர் 17-ல் பரமபதவாசல் திறக்கப்படுகிறது.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு வாய்ந்தது.
பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் நம்பெருமாள் பகல்பத்து உற்சவத்தின் போது அர்ச்சுன மண்டபத்திலும், இராப்பத்து உற்சவத்தின் போது திருமாமணி மண்டபத்திலும் (ஆயிரங்கால் மண்டபம்) எழுந்தருளுவார்.
முக்கிய உற்சவங்கள்: நிகழாண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா திங்கள்கிழமை திருநெடுந்தாண்டகம் வைபவத்துடன் தொடங்கவுள்ளது. பகல்பத்து உற்சவம் டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்குகிறது. காலை 6.15 மணிக்கு நம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தை அடைகிறார். அங்கு மாலை வரை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.