கடலூர், டிச. 11: கடலூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டீசல் ஆட்டோக்கள் இயக்கப்படுவதால், கடலூர் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
கடலூரில் பெட்ரோல் ஆட்டோக்கள் 1,500, டீசல் ஆட்டோக்கள் 1,500, ஷேர் ஆட்டோக்கள் 50 இயக்கப்படுகின்றன. டீசல் ஆட்டோக்கள், பெட்ரோல் ஆட்டோக்களைவிட அளவில் சற்று பெரியதாகவும், எரிபொருள் செலவு குறைவாகவும் இருப்பதால், டீசல் ஆட்டோக்கள் பெருமளவில் கடலூரில் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக கடலூரில்தான் அதிக அளவில் டீசல் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக, போக்குவரத்து போலீஸார் தெரிவிக்கிறார்கள்.
டீசல் ஆட்டோக்களிலும் 3 பயணிகளைத் தான் ஏற்ற வேண்டும் என்று போக்குவரத்து விதிகள் தெரிவிக்கின்றன. பெட்டோல் ஆட்டோக்கள் அதிகபட்சம் 5 பணிகளை ஏற்றுகிறார்கள். ஆனால் டீசல் ஆட்டோக்களில் 9 பயணிகள் வரை ஏற்றுகிறார்கள். டீசல் ஆட்டோக்கள் அதன் அமைப்பு காரணமாக அதிக அளவில் விபத்துக்கு உள்ளாவதும், அதில் பயணிகள் அதிகம்பேர் பாதிக்கப்படுவதும், கடலூரில் வாடிக்கையாகி விட்டது.
கடலூரில் இயக்கப்படும் டீசல் ஆட்டோக்களில் சுமார் 500 எண்ணிக்கை, கடலூர் புதுவை மார்க்கத்தில், மகாத்மா காந்தி மருத்துவமனை வரை இயக்கப்படுகிறது. சில ஆட்டோக்கள் புதுவை மாநிலம் அரியாங்குப்பம் வரை இயக்கப்படுகின்றன.
கடலூரில் இருந்து புதுவை மாநில எல்லைக்குள் இயக்கப்படும் டீசல் ஆட்டோக்களில் பெரும்பாலானவை, கடலூர் - புதுவை எல்லையில் அமைந்துள்ள, கடலூர் மக்களையே குறியாகக் கொண்டு, புதுவை அரசாங்கத்தால் திறக்கப்பட்டு உள்ள சாராயக் கடைகளுக்கும், மது அருந்தும் பார்களுக்கும் சென்று வருபவை. இதில் பயணிகளுக்கான கட்டணம் குறைந்தபட்சக் கட்டணம் 2, அதிகபட்சக் கட்டணத்துக்குக் கட்டுப்பாடு இல்லை. புதுவை மார்க்கத்தில் இயக்கப்படும் டீசல் ஆட்டோக்கள் நாளொன்றுக்கு 700 வரை சம்பாதிக்கின்றன. இதனால் புதுவை மார்க்கத்தில் இயக்கப்படும் பஸ்கள் பாதிக்கப்படுவதாகவும் ஓட்டுநர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்.
குறிப்பாக மாலை நேரங்களில் இந்த டீசல் ஆட்டோக்களில் பயணிப்போர் குடிமகன்கள்தான். ஆனால் இவர்கள் போகும்போது இருக்கும் நிலை, திரும்பி வரும்போது இருப்பதில்லை. அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வருவோரை, அவர்கள் எங்கு இறங்க வேண்டும் என்று அறியாத டீசல் ஆட்டோ ஓட்டுநர்கள், மனிதாபிமானமற்ற முறையில், ஆட்சியர் முகாம் அலுவலக வாயிலிலும், அதற்கு அருகில் உள்ள சுப்புராயலு பூங்கா அருகிலும் பெரும்பாலும் தள்ளிவிட்டுச் சென்று விடுகிறார்கள். சுப்புராயலு பூங்கா அருகிலும், ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகிலும் நாள்தோறும் பலர் குடிபோதையில் உருண்டு கிடப்பதைப் பார்க்கச் சகிக்கவிலை என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
கடலூர் நகருக்குள்ளும் இந்த டீசல் ஆட்டோக்களின் பெருக்கம், சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்னைகளுக்கும் காரணமாக உள்ளன. இந்த சிறிய நகரத்தில், 1,500 டீசல் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது எப்படி என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
டீசல் ஆட்டோக்களுக்கு இனிமேலும் அனுமதி அளிக்கக்கூடாது என்று, பெட்ரோல் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களின் சங்கங்கள் அரசுக்கு பல முறை கோரிக்கை மனுக்களை அளித்து இருப்பதாக, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க சட்ட ஆலோசகர் எம். சேகர் தெரிவித்தார்.
டீசல் ஆட்டோக்களுக்கு அனுமதி கூடாது என்று கடலூரைச் சேர்ந்த குமரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து இருக்கிறார்.
டீசல் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்த முடியாமல் போக்குவரத்து போலீஸாரும் தவிக்கிறார்கள்.
"போராடியும் பயனில்லை'
கடலூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க (சிஐடியூ) செயலாளர் பாபு கூறுகையில், ""கடலூரில் ஆட்டோக்களின் குறிப்பாக டீசல் ஆட்டோக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி விட்டது. ஓட்டுநர்களுக்கு வருமானம் குறைந்து விட்டது. நிறுத்துவதற்குக் கடலூரில் இடமே இல்லை. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரிக்கிறது. டீசல் ஆட்டோக்களுக்கு இனி பெர்மிட் கொடுக்க வேண்டாம் என்று, போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்து, நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தி வருகிறோம். பலன் இல்லை.
வருமானத்தைக் கருதி பல டீசல் ஆட்டோக்கள், புதுவை மார்க்கத்தில் உள்ள கன்னிகோயில் மற்றும் மகாத்மா காந்தி மருத்துவமனை வரை செல்கிறார்கள். சாராயக் கடைகளுக்கும், மது அருந்தும் பார்களுக்கும் செல்லும் இந்த ஆட்டோக்களால் நிறைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவர்களைக் கட்டுப்படுத்தினால், கடலூர் நகருக்குள் அதிக பிரச்னை ஏற்படும். எனவே டீசல் ஆட்டோக்களுக்கு பெர்மிட் கொடுப்பதை முதலில் நிறுத்த வேண்டும்'' என்றார்.
"தகுந்த நடவடிக்கை'
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் கூறுகையில், தாம் அண்மையில்தான் பொறுப்பு ஏற்று இருப்பதால், முழுமையாக ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.