சென்னை, டிச. 11: தமிழகம் முழுவதும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 170-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாய தொழிலாளர்களும், கூலித் தொழிலாளர்களும் வருவாய்க்கு வழியின்றி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரவர் பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும். நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுக்கு உதவ வேண்டும் என்று தங்கபாலு கேட்டுக் கொண்டுள்ளார்.