திருச்சி, டிச. 18: மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பாப்பா உமாநாத் உடல், பொன்மலை தியாகிகள் திடலில் சனிக்கிழமை இரவு அடக்கம் செய்யப்பட்டது.
இரங்கல் கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், "சுரண்டலுக்கு எதிராகவும், பெண்ணுரிமை, அறிவுப் புரட்சிக்காகவும் பாப்பா உமாநாத் மேற்கொண்ட போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களுள் ஒருவரும், ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான பாப்பா உமாநாத் (80) திருச்சியில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.
கரூர் புறவழிச்சாலையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அனைத்துக் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு கட்சி அலுவலகத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. தில்லைநகர், டிவிஎஸ் டோல்கேட் வழியாக பொன்மலை சென்றடைந்தது. அங்கு தட்சிண ரயில்வே தொழிலாளர் சங்கத்துக்குச் சொந்தமான தியாகிகள் திடலில், 1946-ல் இங்கு நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸôரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்த 5 தொழிலாளர்களின் நினைவிடங்களுக்கு அருகே, பாப்பா உமாநாத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மார்க்சிஸ்ட் கட்சியினர் வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். ஸ்ரீதர் தலைமை வகித்தார். இதில் பிருந்தா காரத் பேசியது:
"புரட்சிகரமான தம்பதிகளாக வாழ்ந்த உமாநாத்- பாப்பா உமாநாத்தின் அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கை அத்தனை சாதாரணமானதல்ல. பாப்பா உமாநாத்தின் மறைவுக்கு, அரசியல் தலைமைக்குழு, மத்தியக்குழுவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கும், மாநிலக் கட்சிக்கும், மாதர் சங்கத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார் பிருந்தா.
கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் இரங்கல் உரை நிகழ்த்தினர்.