சென்னை, டிச.26: கச்சத்தீவை தமிழகத்துக்கு மீட்டுத்தர வேண்டும் என்று மத்திய அரசை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழர் இறையாண்மை மாநாடு, அதன் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் விவரம்:
தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி ஐ.நா.பேரவைக்கு அழுத்தம் கொடுக்க மத்திய -மாநில அரசுகளும், உலகத் தமிழர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
ஈழத்தமிழர்களின் பூர்வீக இடத்தில் ராணுவ முகாம்களை நிறுவி, படையினரின் குடும்பத்தினர் என்ற பெயரில் சிங்களர்களை குடியேற்றம் செய்தல் போன்ற போக்கைத் தடுத்து நிறுத்தவும்,அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை ஐ.நா. மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் உடனடியாக முன்வர வேண்டும்.
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபட்ச, அவரது சகோதரர்களை அனைத்துலக நீதிமன்றத்தின் போர்க் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்கிட ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
போர் மரபுகளை மீறாமல், சிங்களப் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தாமல் சிங்களப் படையினரோடு மட்டுமே போர் நடத்திய-நடத்தி வருகிற தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு வெகுமக்கள் இயக்கமாக ஏற்று, அதன் மீதான சர்வதேச தடைகளை நீக்க வேண்டும்.
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்குரிய சராசரி கால அளவையும் தாண்டி, 20 ஆண்டுகளாகச் சிறையிலிருந்து வரும் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட அனைத்து தண்டனைக் கைதிகளையும், கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் இன்னபிற
வழக்குகளிலும் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலிருந்து வரும் இஸ்லாமியர் உள்ளிட்ட தண்டனைக் கைதிகளையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
எந்த விசாரணையுமில்லாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைச்சிறையில் சிக்கி வாடும் தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென்னிந்தியர்களை இந்திய நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி, அனைவரையும் உடனே இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்.
தென்தமிழக மீனவர்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் இலங்கை அரசு மீது மத்திய அரசு பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும்.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த இந்திய இலங்கைக்கு இடையே ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் தமிழக மீனவர்களின் பாதுகாப்பையும் - இந்திய கூட்டரசின் எல்லைப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டு, கச்சத்தீவு தமிழக எல்லைக்கு மீட்டுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலங்களின் உணர்வை மதிக்காமல் உயர்கல்வி மற்றும் மருத்துவக்கல்வி தொடர்பான அதிகாரங்களை மத்தியில் குவித்துக்கொள்ளும் நோக்கோடு உருவாக்கியிருக்கும் மருத்துவம், உயர்கல்வி மற்றும் உயராய்வுக்கல்வி தொடர்
பான அமைப்புகளைக் கலைத்திட வேண்டும்.
தேசிய புலனாய்வு நிறுவனம் என்ற அமைப்பு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாநில காவல்துறை தொடர்பான உரிமைகளை பறிப்பதாக உள்ளது. எனவே இந்த அமைப்பை கலைத்திட வேண்டும்.
வெளிநாடுவாழ் மற்றும் பணிபுரியும் தமிழர்களின் நலனைக் காக்கும் வகையில், தமிழர்கள் பெரும்பான்மையாக பணி செய்யும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமிழ் அதிகாரிகள் பெருமளவில் நியமிக்கப்பட வேண்டும்.
அனைத்து குடிமகனும் அவரவர் தாய்மொழி வழியில் முழுமையான கல்வி பெற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தகுந்த காப்புகளை உருவாக்க வேண்டும்.
இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள 1,600-க்கும் மேற்பட்ட மொழிகளும் தமது இறையாண்மையைக் காத்துக்கொள்ளும் வகையில், அந்தந்த மொழிகளின் மீது பிற மொழிகளின் ஆதிக்கத்தை ஒழிக்கவும் மொழி இன நலன்களுக்கான தேசிய பேராயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும.
தமிழகத்தில் தமிழ்மொழியைக் காக்கும் வண்ணம் தமிழ்ப்பெயர் ஏற்போருக்கு பெயர் மாற்ற அரசிதழ் பதிவிற்கு முழு கட்டண விலக்கு அளிக்க வேண்டும். தமிழ்ப்பெயரில்லாத திரைப்படங்களுக்கு இரட்டிப்பு வரி விதிக்க வேண்டும்.
ஆங்கில வழி மழலையர் வகுப்புகள் முற்றிலும் நீக்கப்பட வேண்டும். உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் தமிழே வழக்காடு மொழியாக இருக்க வேண்டும்.
தமிழக எல்லைக்குள் ஓடும் நதிகளைப் பாதுகாக்கும் வகையில் நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்கும் வகையிலும் சட்டப்படி செயல் அதிகாரம் பெற்ற நதிகள் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகள் அனைத்தும் மத்திய அரசின் உடைமையாக்கப்பட வேண்டும். மேலும், மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகள் அனைத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பின் இணைப்பில் கூட்டரசின் பட்டியலில் அறிவிக்க வேண்டும்.
ஆறுகள், கனிமவள வரையறையில் இருந்து நீக்கப்பட வேண்டும். ஆறுகளில் மணல் அள்ளுவது தடை செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் ரியல் எஸ்டேட் தொழிலாக மாறி வருவதைத் தடுக்க, தமிழக நிலங்களின் மீது தமிழ்நாடு அரசு தன்னுடைய சட்டப்பூர்வமான ஆளுமையைக் கொண்டுவர வேண்டும்.
அனைத்து நிலங்களையும் மாநில அரசின் மேலாண்மைக்கு உட்படுத்தும் வகையில் தமிழக நில ஆணையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
விவசாய நிலங்களை விவசாய பயன்பாடுகளுக்கு மட்டும் விற்கவோ - வாங்கவோ முடியும் என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும். கோயில் நிலங்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும்.
சென்னையில் உள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு அவர்கள் வாழுகின்ற பகுதியிலேயே வீடுகளைக் கட்டிக்கொள்ள தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.
ஏழை மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு முழு மதுவிலக்குக் கொள்கையை ஏற்று அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக இழுத்து மூட வேண்டும் என்பது உள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.