இந்தியாவைக் காப்பாற்றுவது ஆன்மிகம்தான்: எஸ். குருமூர்த்தி

சென்னை, ஜன. 12: ஆன்மிகம்தான் பல்வேறு நெருக்கடிகளில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றி வருகிறது என்று பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார். "ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்' மாத இதழ் நடத்திய அகில இந்திய ஓவி
இந்தியாவைக் காப்பாற்றுவது ஆன்மிகம்தான்: எஸ். குருமூர்த்தி

சென்னை, ஜன. 12: ஆன்மிகம்தான் பல்வேறு நெருக்கடிகளில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றி வருகிறது என்று பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார்.

"ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்' மாத இதழ் நடத்திய அகில இந்திய ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் அவர் பேசியது:

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நடத்திய ஓவியப் போட்டியில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளது பாராட்டுக்குரியது.

இந்தியாவின் ஆற்றலை உலகத்துக்கு உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். இந்தியாவின் தனித்தன்மை அதன் ஆன்மிகம்தான்.

மக்களிடம் உள்ள ஆன்மிக உணர்வுதான் இந்தியர்களை பல்வேறு நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றியுள்ளது. அதனால்தான் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா தப்பியது.

இந்தியர்களின் ஆன்மிகத் தன்மையால் இங்கு குடும்ப அமைப்பு சிறப்பாக உள்ளது. அதனால் சேமிக்கும் பழக்கம் தொடர்கிறது. குடும்பங்களின் சேமிப்புதான் இந்தியாவின் பொருளாதாரத்தை பலமாக வைத்துள்ளது.

இந்தியா இப்போது அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வருகிறது என்று கருதுவது கற்பனை. வெளிநாட்டில் இருந்து வரும் முதலீடுகள் நமது மக்களின் சேமிப்போடு ஒப்பிடும்போது வெறும் 2 சதவீதம் மட்டுமே.

வெளிநாட்டில் இருந்து ஒரு டாலர் பணம் கூட நமது நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படவில்லை. நமது சேமிப்புதான் பயன்படுகிறது. அந்நிய முதலீடு பங்குச் சந்தையில்தான் புழங்குகிறதே தவிர கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உதவுவதில்லை என்பதே உண்மை.

அமெரிக்கா போன்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

இந்தியாவில் 7 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. ஆனால் சுமார் 12,500 காவல் நிலையங்கள் மட்டுமே உள்ளன. ஆனாலும் குற்றங்கள் குறைவாகவே உள்ளன.

அதற்குக் காரணம் இந்தியர்களிடம் உள்ள ஆன்மிக உணர்வுதான். இந்த ஆன்மிகத் தன்மை இல்லாமல் போனதால்தான் அமெரிக்காவில் மிகப்பெரிய சமூக, பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார் குருமூர்த்தி.

டிஜிபி ஆர்.நடராஜ்: ஆதிசங்கரர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி ஆகிய மூன்று தலைவர்களும் ஒவ்வொரு இந்தியரையும் நேசித்த தலைவர்கள்.

அவர்கள் ஒவ்வொருவரும் அகண்ட பாரதம் முழுவதும் வலம் வந்தவர்கள். இந்தியாவின் ஒற்றுமைக்கும், இந்திய கலாசாரம், பண்பாட்டை காப்பதற்கும் அடித்தளமிட்டவர்கள். தர்மத்தைக் காக்கப் போராடியவர்கள்.

தன்னம்பிக்கையும், அச்சமின்மையும் இளைஞர்களுக்கு வேண்டும் என்று முழங்கியவர் சுவாமி விவேகானந்தர்.

கேள்வி கேட்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்கவும், அவற்றுக்கு ஆசிரியர்கள் பதிலளிக்கும் சூழலும் உருவாக வேண்டும் என்றார் நடராஜ்.

ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 20 மாணவ, மாணவிகளுக்கு சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தர் பரிசு வழங்கினார்.

இந்த விழாவில், "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் பங்கேற்றுப் பேசினார்.

"ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்' மாத இதழின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர், தொழிலதிபர் தேவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேசிக் கொண்டிருந்தால் பயனில்லை

இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.திருவாசகம் நிகழ்த்திய தொடக்க உரை:

சமூக சிந்தனை இல்லாத ஆன்மிகத்தால் எந்தப் பயனும் இல்லை. அதனை வலியுறுத்தியவர்தான் சுவாமி விவேகானந்தர். சிந்தனைகளில் கற்பனையும், செயல்பாடுகளில் அறிவியலும் கொண்டு இயங்கியவர் அவர்.

அதனால்தான் விவேகானந்தரின் சிந்தனைகள் காலம் கடந்தும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. நம்மை வழிநடத்தும் சுவாமி விவேகானந்தர் போன்ற முன்னோடிகளின் அருமை, பெருமைகளை மட்டும் நாம் பேசிக் கொண்டிருந்தால் பயனில்லை. அவர்களின் கருத்துக்கள் மக்களுக்குப் பயன்படும் வகையில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

நமது கல்வி நிலையங்களில் நல்ல மனிதர்களை உருவாக்கும் பாடத்திட்டம் இல்லை. அதுபோன்ற பாடத்திட்டங்களை உருவாக்க ஸ்ரீராமகிருஷ்ண மடம் போன்ற அமைப்புகள் உதவ வேண்டும் என்றார் திருவாசகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com