6 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ரூ. 120 கோடி தகுதியற்ற செலவு: சி.ஏ.ஜி. அறிக்கை

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 120 கோடி நிதியை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தியுள்ளன.
6 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ரூ. 120 கோடி தகுதியற்ற செலவு: சி.ஏ.ஜி. அறிக்கை

சென்னை, ஜன.12: தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 120 கோடி நிதியை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தியுள்ளன. இதை இந்திய தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

2007-08-ம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளைத் தணிக்கை செய்த இந்திய தணிக்கைத் துறை அது தொடர்பான அறிக்கையை அளித்தது. இந்த அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் உள்ள அம்சங்கள் குறித்து தமிழகம், புதுச்சேரியின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் சங்கர் நாராயணன் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது:  

கோவை, ஈரோடு, மதுரை, பெரம்பலூர், சிவகங்கை மற்றும் நீலகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் தகுதியற்ற இனங்களுக்கு திட்டச் செலவிலிருந்து நிதி எடுத்து செலவழித்துள்ளனர்.

அதன் மூலம்  சாதனைகள் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளன. தகுதியற்ற இனங்கள் வரிசையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்குதல், இலவச எரிவாயு அடுப்பு வழங்குதல் ஆகியவற்றை தணிக்கையாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

2006-08-ம்ஆண்டு காலத்தில் ஓய்வூதியம் மற்றும் கடன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான ஒதுக்கீட்டுக்கு மானியம் ஆகியன சாதனைகளாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. ஆனால் இது எந்த வகையிலும் பயனளிக்காத, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாத செலவினங்களாகும். இந்த வகையில் ரூ. 120.98 கோடி தகுதியற்ற செலவுகளை இந்த ஆறு மாவட்டங்களும் செய்துள்ளன.

2006-ம் ஆண்டு திமுக அரசு ஆட்சிக்கு வந்தததும் மாநிலத்தின் 12,618 ஊராட்சிகளிலும் ஐந்தாண்டு காலத்தில் உள்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்கு கணிசமான வள ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உள்ள ஐந்தில் ஒரு பங்கு கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ. 15 லட்சத்தை குட்டைகள், ஊரணிகள், விளையாட்டு மையங்கள், மீன் குட்டைகள், சந்தைகள் போன்ற கிராமக் குழுவால் தேர்வு செய்யப்படும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

எஞ்சிய ரூ. 5 லட்சத்தில் இதர பணிகளை மேற்கொள்ளவேண்டும். ஆனால் இந்த ஆறு மாவட்டங்களும் நிதியை வருவாய் தராத, கட்டமைப்பை மேம்படுத்தாத திட்டங்களுக்கு செலவிட்டுள்ளனர் என்று சங்கர நாராயணன் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com