சென்னை, ஜன. 22: விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியான எட்டு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பது:
"விருதுநகர் மாவட்டம் கன்னிசேரி புதூர் கிராம உட்கடை தியாகராஜபுரம் கிராமத்தில் வெடிபொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது.
அதில், வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோர் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகையாக அளிக்கப்படும்.
மேலும் காயம் அடைந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.