சென்னை, ஜன. 29: எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயம் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்ற ஆணையை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அனைத்து தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தரமான கல்வியும் வளமான தமிழகமும் உருவாக வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து தனியார் பள்ளிகள் சங்கங்களின் முதல் மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்: தமிழகத்தின் கல்வித்துறை சாதனைகளில் தனியார் பள்ளிகளின் பங்கு கணிசமானது. ஏழைக் குடும்பத்து மாணவர்களுக்கும் உலகத் தரத்திலான கல்வியை தனியார் பள்ளிகள் வழங்கி வருகின்றன.
மாணவர்களை சீர்திருத்தி, நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் சில சமயங்களில் கண்டிப்பான அணுகுமுறைகளைக் கையாள்வது தவிர்க்க முடியாதது. ஆனால் நன்னடத்தை விதிமுறைகள் என்ற பெயரில் எவ்வித கண்டிப்புமே கூடாது என்றும் கண்டிக்கும் ஆசிரியர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆசிரியர் பணிக்கு இடையூறாக அமைந்துள்ளன. எனவே ஆசிரியர் நன்னடத்தை விதிமுறைகள் குறித்து பள்ளி நிர்வாகங்களுடன் அரசு கலந்தாலோசிக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளுக்கு கட்டட வரிவிலக்கு 1994-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்தது. பஞ்சாயத்துகளில் செயல்படும் பள்ளிகளுக்கான கட்டட வரிவிலக்கை தமிழக அரசு அண்மையில் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் மாணவர்களின் கட்டணச் சுமை அதிகரித்து, கிராமப்புறப் பள்ளிகளின் முன்னேற்றம் தடைப்படும் என்பதால் இதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
தனியார் பள்ளிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை 10 ஆண்டுகள் தொடர்ந்து அங்கீகாரத்தைப் புதுப்பிக்கும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.
இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயம் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்ற ஆணை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தினால் படிக்காமலேயே தேர்ச்சி பெறும் மாணவர்கள், எதிர்காலத்தில் பெரும் சுமையைச் சந்திக்கும் அபாயம் உள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி கட்டாயத் தேர்ச்சி ஆணையை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
தேசியப் பாடத் திட்டக் கொள்கையில் கூறப்பட்டுள்ள மூன்று மொழிக் கொள்கையைக் கருத்தில் கொண்டு சமச்சீர் பாடக்குழு தனது பாடத் திட்டத்தை அமைக்க வேண்டும்.
கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த மாநாட்டில் முன் வைக்கப்பட்டன. மாநாட்டில் அனைத்து தனியார் பள்ளிகள் சங்கத்தின் உயர் குழு தலைவர் எஸ். குணசேகரன், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சங்க நிர்வாகிகள் கூட்டமைப்பின் தலைவர் டி. கிறிஸ்துதாஸ், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி.சி. இளங்கோவன், விஜடி பல்கலைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன், மாஃபா பாண்டியராஜன் ஆகியோரும் தமிழகம் முழுவதிலும் இருந்து 3000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிலிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.