கோவை, ஜூலை 3: நடிகர் சிவகுமாரின் இளைய மகன் நடிகர் கார்த்தி-ரஞ்சனி திருமணம் கோவையில் தமிழில் திருமந்திரங்கள் ஓத ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நடிகர் சிவகுமாரின் சொந்த ஊர் கோவை சூலூர் அருகே உள்ள காசிகவுண்டன்புதூர். இவரது இளைய மகன் கார்த்திக்கும் ஈரோடு மாவட்டம் குமாரசாமிக்கவுண்டன்பாளையம் சின்னசாமி-ஜோதிமீனாட்சி தம்பதியினரின் மகள் ரஞ்சனிக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமண விழாவையொட்டி "கொடிசியா' அரங்கம் பிரமாண்டமான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நீள் வட்ட வடிவத்தில் அரங்கின் உள்பகுதி
வடிவமைக்கப்பட்டு, மேற்கூரை முழுவதும் வண்ணத் திரைச் சீலைகளால் அலங்கரிக்கப்பட்டு, மின் விளக்குகளால் ஒளிர்ந்தன. சூரத்தில் இருந்து பிரத்யேகமாக வண்ணமேற்றப்பட்ட திரைச்சீலைகள் வரவழைக்கப்பட்டன. அரங்கின் முன் பகுதி பந்தலின் மேற்புறமும் திரைச்சீலை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நுழைவாயிலில் ஸ்ரீ வேங்கடாசலபதி, அலர்மேல்மங்கை உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
திருமண மேடை வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டு, மணமக்கள் இருக்கைக்குப் பின்புறம் வள்ளி, தெய்வானை, முருகப்பெருமான் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. மணமேடையிலும், முன்புறமும் வண்ணப்பூக்களின் அலங்காரம் கண்களைக் கவர்ந்தன.
மணமேடைக்கு அதிகாலை 5.15 மணிக்கு மணப்பெண் அழைத்துவரப்பட்டார். அவருக்கு தாய் மாமன் சீர் செய்யப்பட்டு, நெற்றிப்பட்டை அணிவிக்கப்பட்டது. 5-45 மணிக்கு மணமகன் கார்த்தி மணமேடைக்கு வந்தார். பேரூர் மாணிக்கவாசகர் அருட்பணி மன்றத்தைச் சேர்ந்த பழ.குமரலிங்கம் தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தார். திருப்பல்லாண்டு, பெரியபுராணம், திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவாகசம் என தமிழ் மந்திரங்கள் ஓதப்பட்ட பின் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார். அதன் பின் மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டு அக்னி வலம் வந்து பெற்றோர்களிடம் ஆசி பெற்றனர். பின்னர் சூர்யா-ஜோதிகாவிடம் ஆசி பெற்றனர்.
அதன்பின் மணமகளின் சகோதரருடன் கை கோர்ப்பு சீர் நடைபெற்றது. மணமேடையில் மணமகனும் மணமகளின் சகோதரரும் தட்டில் நெல் மீது கைகளைக் கோர்த்து அமர்ந்திருக்க, கொங்கு வேளாளக் கவுண்டர் குல வழக்கப்படி பாடல்களை அருமைக்காரர் பாடினார்.
மணவிழாவில் நடிகர்கள் பிரபு, ராஜேஷ், நிழல்கள் ரவி, பாண்டியராஜன், சரவணன், நடிகைகள் நக்மா, ராதிகா, திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிகுமார், பாலா, சங்கர் தயாளன், ஹரி, மனோபாலா, இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடகி சுசித்ரா, கவிஞர் அறிவுமதி, சாலமன் பாப்பையா, ஆர்ட் டைரக்டர் ராஜீவன், ரவி கே.சங்கர், தயாரிப்பாளர்கள் திருப்பூர் பாலு, கோவை மணி, எஸ்.ஏ.ராஜ்கண்ணு, ஞானவேல் ராஜா உள்ளிட்டோரும், ரசிகர்களும் திரண்டிருந்து மணமக்களை வாழ்த்தினர்.
சனிக்கிழமை உருமால்கட்டு சீர், வரவேற்பு நிகழ்ச்சி, இரவில் இணைச்சீர் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது. மணவிழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
கார்த்தி - ரஞ்சனி திருமண ஆல்பம்: