திருவள்ளூர், ஜூலை 9: உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியும் அதற்குண்டான வசதிகள் ஏதும் செய்யப்படாததால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது.
திருவள்ளூர் ராஜாஜி சாலையில் உள்ளது நகராட்சி மேல்நிலைப் பள்ளி. உயர்நிலைப் பள்ளியாக இருந்த இப்பள்ளி கடந்த 2010-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 12-ம் வகுப்பில் அறிவியல், கணிதம், கணினி அறிவியல் உள்ளிட்ட 3 பிரிவுகள் உள்ளன. மூன்று பிரிவுகளிலும் சேர்த்து 47 மாணவர்கள், 38 மாணவிகள் என மொத்தம் 85 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக இருக்கும் போதே இடப் பற்றாக்குறை இருந்து வந்தது. தற்போது மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு மாணவர்கள் அமர இடம் இல்லாமல் கடும் அவதிப்பட வேண்டியுள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பாடப்பிரிவு நடத்தும் போது மற்ற மாணவர்கள் வெளியில் அமர வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் அறிவியல் பிரிவு படிக்கும் மாணவர்களுக்கு சோதனைக் கூடம் இல்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. முக்கியமாக கணினி ஆசிரியர், தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் இப்பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறையும் என ஆசிரியர்களும், பெற்றோர்களும் அச்சத்தில் உள்ளனர். திருவள்ளூரிலேயே அரசு மேல்நிலைப் பள்ளி என பெயர் சொல்ல இந்த ஒரு பள்ளி மட்டுமே உள்ளது. ஆனால் இப்பள்ளியும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கத் தயங்குகின்றனர்.
அதே பள்ளியில் உயர்நிலைக் கல்விக்கும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. 9, 10-ம் வகுப்புகளுக்கு சமூக அறிவியல், கணிதம், அறிவியல், தமிழ் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. உடல் கல்வி ஆசிரியர் பணியிடமும் காலியாக உள்ளது. இப்பள்ளிக்கென இதுவரை விளையாட்டு மைதானமும் அமைக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் குறித்து விழிப்புணர்வே ஏற்படாமல் உள்ளது. மேலும் மாணவிகளின் தொழிற் கல்விக்காக ஏற்படுத்தப்பட்ட தையல் ஆசிரியை பணியிடமும் காலியாக உள்ளது.
இப்பள்ளி வளாகத்தில் தண்ணீரும் பிரச்னையாக உள்ளது. இதுபோல் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இயங்கி வரும் பள்ளி குறித்து நகராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, பள்ளியில் இடப்பற்றாக்குறை இருப்பது உண்மை தான். ஆகையால் எம்ஜிஎம் நகரில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பள்ளிக் கட்டடத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கல்வி தொடர்பான குறைகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளோம் என்றனர்.
கல்வி விஷயத்தில் அதிகாரிகள் தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்பதை உணர்ந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்பதே கல்வி நிபுணர்கள், சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.