சென்னை, ஜூலை 9:தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் எந்த பாடத்திட்டத்தை அமல்படுத்துவது என்பதில் ஏற்பட்டு வரும் நீண்ட நெடிய தாமதம், கல்வியாண்டின் இறுதிக்குள் ஆசிரியர், மாணவர், பெற்றோர் தரப்பினரை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் என்று கல்வியாளர்கள் அஞ்சுகின்றனர்.
பொதுக் கல்வித் திட்டம், அருகாமை பள்ளித் திட்டம், தாய்மொழிக் கல்வி ஆகிய கூறுகளை உள்ளடக்கியதாக அமைய வேண்டிய சமச்சீர் கல்வித் திட்டம் பொதுப் பாடத்திட்டம் என்ற ஒரு சிறப்புக் கூறை மட்டும் கொண்டு அமைந்த சமச்சீர் கல்வியை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் அளித்திருந்த நிலையிலும், இந்த அளவிலாவது அமலாக்க முடிந்ததே என்ற நிம்மதி ஏற்பட்டிருந்தது.
1, 6 வகுப்புகளைப் போலவே ஏனைய வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி 2011-12 ஆம் கல்வியாண்டில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், சமச்சீர் கல்வி ஒத்திவைக்கப்படுவதாகவும் பழைய பாடத்திட்டமே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆசிரியர், பெற்றோர், மாணவர்களின் மனநிலையில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்திய இந்த அறிவிப்பு இன்று வரையிலும் இறுதி முடிவை எட்டவில்லை.
ஏற்கெனவே அரசுகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் மாணவர் நலன் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்து வரும் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு கடந்த ஜூன் 15-ம் தேதி முதல் பாடங்கள் நடத்தப்படாமலேயே வகுப்புகள் நடந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 15 வரை தமிழ், ஆங்கிலம் பேசுதல், எழுதுதல், வாசித்தல், இலக்கணப் பயிற்சிகளும், கூட்டல், கழித்தல், வாய்ப்பாடுகள் என கணிதப் பயிற்சியும், பரிசோதனைகள், தாவரங்களை கள ஆய்வு செய்தல் என அறிவியல் பயிற்சிகளும், வங்கிகள், ரயில் நிலையம், தபால் அலுவலகங்கள், பால் பண்ணைகளைப் பார்வையிடுதல் என்று சூழலியல் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதேபோல் மெட்ரிக் பள்ளிகளில் இலக்கணம், கையெழுத்துப் பயிற்சிகள், பொது அறிவு பயிற்சிகள் அளிப்பதற்கான சி.டி.க்களை அரசு வழங்கியுள்ளது. எந்தப் பாடத்தை கற்பிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் உத்தரவு வராத நிலையிலேயே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள், தங்களுடைய பழைய பாடத்திட்டத்தையே நடத்தி வருவதாக கூறப்படுகிறது.பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கவே பாடம் நடத்தப்படுவதாக மெட்ரிக் பள்ளிகள் தரப்பில் கூறப்பட்டாலும், மெட்ரிக் பாடங்களை நடத்தும்படி நாங்கள் கூறவில்லை. அவர்களே தவறுதலாக புரிந்து கொண்டு பாடம் நடத்தி வருகின்றனர். நீதிமன்றத் தீர்ப்பை அடுத்துதான் பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் இயக்குநர் தேவராஜன் கூறுகிறார்.பாடம் நடத்த வேண்டும் என்ற வலியுறுத்தல் ஒருபுறம், நடத்தக் கூடாது என்ற உத்தரவு மறுபுறம் இதில் சிக்கி நாங்கள் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்து வரும் சூழலில், பாடம், வீட்டுப்பாடம் இல்லாததால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாக ஆசிரியர் தரப்பில் கூறப்படுகிறது.
பாடங்களே எதுவும் நடத்தப்படாத நிலையில் ஜூலை இறுதியில் நடத்தப்பட வேண்டிய முதல் இடைத் தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இணைப்புக் கல்வித் திட்டத்தில் இருந்தே வினாக்களைக் கொண்டு இந்தத் தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும் தெரிகிறது.
இதற்கிடையே பள்ளிக்கு வந்ததும் இன்று என்ன சி.டி. ஒளிபரப்புவீர்கள், எந்த ஊருக்கு சுற்றுலா அழைத்துச் செல்வீர்கள் என்று அரசுப் பள்ளி மாணவர்கள் கேட்பதாகக் கூறும் ஆசிரியர்கள், செப்டம்பரில் நடைபெற உள்ள காலாண்டுத் தேர்வுக்கு அவர்களை எப்படித் தயார் செய்வது என்ற கவலையில் இருப்பதாகக் கூறுகிறார் அரசுப் பள்ளி 10-ம் வகுப்பு ஆசிரியர் ஒருவர்.
விளையாட்டு மனநிலையில் இருக்கும் மாணவர்களை பாடத்திட்டம் முடிவு செய்யப்பட்டு அச்சிட்டு வந்ததும் மிரட்டி, விரட்டி படிக்க வைப்பதும் தேர்ச்சி பெற வைப்பதும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரிய சவாலாகவே இருக்கும். ஏற்கெனவே இருந்த பாடத்திட்டம் என்றால் பிரச்னை இல்லை.
ஒருவேளை சமச்சீர் கல்வித்திட்ட பாடநூல்கள் அமலுக்கு வந்தால் அவற்றை முறையாகக் கற்பிப்பதற்கான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு குறைந்தது ஒரு மாத காலம் வழங்கப்பட வேண்டும். ஏற்கெனவே கால தாமதத்துடன் தொடங்கிய பள்ளிகள், காலாண்டு, அரையாண்டுத் தேர்வு விடுமுறை, சனிக்கிழமை விடுமுறைகள் இல்லாமல் செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் உள்ளது.அத்துடன் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வும், கல்வியாண்டு கால அளவு மாறக் கூடிய சூழலும், பொதுத் தேர்வில் கெüரவமான தேர்ச்சி விகிதத்தை பெற வேண்டிய கட்டாயமும் அடுத்த சில மாதங்களில் பெரும் பிரச்னையாக உருவெடுக்கும். இவை யாவும் ஆசிரியர், மாணவர், பெற்றோர் தரப்பினருக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்துவதாகவே அமையும் என்றே கல்வியாளர்கள் கருதுகின்றனர்.