சென்னை, ஜூலை 9: இரா. செழியன் இல்லாத நாடாளுமன்றத்தைக் கண்டு நாட்டின் மிக மூத்த தலைவர்கள் பலர் கலங்கிப் போனார்கள் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். நடராஜன் தெரிவித்தார்.
இரா. செழியனின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா சென்னை, எதிராஜ் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு அதன் வேந்தர் ஜி. விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
இவ்விழாவில், நூலை வெளியிட்டு நீதிபதி எஸ். நடராஜன் பேசியதாவது:
1962-ம் ஆண்டு முதல் 22 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு உரமூட்டியவர் இரா. செழியன்.
அவர், 24.4.1962 அன்று ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, நாடாளுமன்றத்தில் முதன்முதலாகப் பேசினார். அவரது 12 நிமிஷ உரை குறித்து மறுநாள் வெளியான பிரபல ஆங்கில நாளேடு வெகுவாகப் பாராட்டியது.
தென் மாநிலத்திலிருந்து தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ள புதிய உறுப்பினரான இரா. செழியன், தென் மாநிலங்களின் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் புதிய ரயில் பாதைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆற்றிய உரை, ஒட்டுமொத்த அவையையும் கவர்ந்தது என்று அந்த நாளிதழ் பாராட்டியது. இவ்வாறு தனது முதல் உரையிலேயே நாடாளுமன்றத்தில் முத்திரை பதித்தவர் இரா.செழியன்.
நாடாளுமன்றத்தின் மாண்பை காப்பதில் செழியன் பெரும் பங்காற்றினார். நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் தனது கருத்தை வலியுறுத்திப் பேச எத்தனை வாய்ப்புகள் உள்ளதோ, அவை அனைத்தையும் அறிந்து, பயன்படுத்தி, வலுவான வாதங்களை முன்வைத்தவர் அவர். நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்தையும் அறிந்த பல்துறை வித்தகராக அவர் திகழ்ந்தார்.
தனது சிறப்பான நாடாளுமன்ற செயல்பாடுகள் மூலம் ஜவாஹர்லால் நேரு, ஏ.கே. கோபாலன், என்.ஜி. ரங்கா, எச்.என். முகர்ஜி, எச்.வி. காமத், ஜே.பி. கிருபளானி, ராம் மனோகர் லோஹியா என புகழ்பெற்ற இந்திய அரசியல் தலைவர்களோடு மிக நெருக்கமாகப் பழகும் வாய்ப்பை இரா.செழியன் பெற்றார்.
1977-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிட்ட இரா. செழியன் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டார். அவர் உறுப்பினராக இல்லாத நாடாளுமன்றத்தை எண்ணி, நாட்டின் பல முன்னணித் தலைவர்கள் கலங்கிப் போனார்கள்.
ஜனதா கட்சி மிகவும் வலுவாக இருந்த வடமாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் இருந்து இரா.செழியனை மாநிலங்களவை உறுப்பினராக்கலாம் என்று அடல் பிகாரி வாஜ்பாய், மொரார்ஜி தேசாய் ஆகிய தலைவர்கள் முடிவு செய்தனர். ஆனால், அதனை ஏற்க செழியன் மறுத்துவிட்டார்.
உடனே, அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்ட மொரார்ஜி தேசாய், தமிழகத்திலிருந்து இரா. செழியனை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய அ.தி.மு.க. ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்த வேண்டுகோளை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொள்ளவே 1978-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக இரா.செழியன் தேர்வு செய்யப்பட்டார்.
இவ்வாறு தேசியத் தலைவர்கள் பலரின் அன்பைப் பெற்றிருந்த இரா. செழியன், நாட்டில் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டதற்கு எதிராகவும், மாநிலங்களின் உரிமைக்காகவும், கூட்டாட்சி முறை வலுப்பெற வேண்டும் என்பதற்காகவும் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.
நாடாளுமன்றம், சட்டமன்ற நடவடிக்கைகள் எவ்வாறு கண்ணியத்துடனும், மாண்புடனும் நடைபெற வேண்டும் என்பதை தற்கால உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறும் மிகச் சிறந்த பொக்கிஷமாக இரா. செழியனின் நாடாளுமன்ற உரைகள் குறித்த இந்த நூல் வெளிவந்துள்ளது என்றார் எஸ். நடராஜன்.
நூலினைப் பெற்றுக்கொண்டு பேசிய துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி, யாராலும் ஒரு சிறு குறைகூட காண முடியாத வெகு சில இந்தியத் தலைவர்களில் இரா. செழியன் குறிப்பிடத்தக்கவர். அவர் மிகவும் அமைதியானவர். ஆனால், வலுவான வாதங்களை எடுத்து வைப்பதில் மிகவும் தேர்ந்தவர் என்றார்.
தி ஹிந்து நாளிதழின் முதன்மை ஆசிரியர் என். ராம் பேசியதாவது:
1990-களில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் பிரச்னை எழுந்தபோது, பிரதமரின் தவறுகளை சுட்டிக்காட்டி மத்திய கணக்கு தணிக்கைக் குழுத் தலைவரின் அறிக்கை வெளியானது. கணக்கு தணிக்கைக் குழுத் தலைவர் வரம்பு மீறி செயல்படுவதாகக் கூறி, அவரை இழிவுபடுத்தும் விதத்தில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசினார்கள்.
இதனைக் கண்டு பதைத்த இரா. செழியன், அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதபோதும், இது பற்றி மாநிலங்களவைத் தலைவருக்கு கடிதம் எழுதினார். சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்ட ஒரு அமைப்பின் தலைவரை இழிவுபடுத்தி, நாடாளுமன்றத்தில் பேசுவது ஜனநாயகத்துக்கு ஆபத்தை விளைவிக்கும். கணக்கு தணிக்கைத் துறைத் தலைவருக்கு எதிராக மாநிலங்களவையில் பதிவான உறுப்பினர்களின் பேச்சு அனைத்தையும் நீக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் செழியன் வலியுறுத்தியிருந்தார்.
அதனை ஏற்று, மாநிலங்களவைத் தலைவரும் உறுப்பினர்களின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்கினார்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில், கணக்குத் தணிக்கைத் தலைவரின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இன்று 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் இந்த நாடு உணர்ந்துள்ளது. இதனை அப்போதே உணர்ந்து செயல்பட்டவர் இரா.செழியன் என்றார் ராம்.