சென்னை, ஜூலை 9: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் முதல் தலைமுறை மாணவர்கள் நடப்புக் கல்வி ஆண்டிலும் (2011-12) கல்விக் கட்டணச் சலுகையைப் பெற அரசு ஆணை பிறப்பிக்கப்படுமா என பெற்றோர் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ரூ.4,000 உள்பட ஆண்டுக் கட்டணம் ரூ.12,290-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்புக் கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்த 20,123 மாணவர்களில், குடும்பத்தில் முதல் பட்டதாரிகளின் பிரிவில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 7,565. இவர்களில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து, குடும்பத்தில் முதல் பட்டதாரி பிரிவில் தகுதி பெறுவோருக்கு மேலே குறிப்பிட்ட மொத்த ஆண்டுக் கட்டணம் ரூ.12,290-ல், கல்விக் கட்டணம் ரூ.4,000-த்தை தொடர்புடைய கல்லூரி நிர்வாகம் திரும்பக் கொடுக்க வேண்டும்.
இதே போன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவோருக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.2.50 லட்சத்தில், குடும்பத்தில் முதல் பட்டதாரி பிரிவில் விண்ணப்பித்து தகுதி பெறுவோருக்கு கல்விக் கட்டணச் சலுகை ரூ.1.25 லட்சத்தை சுயநிதி கல்லூரி நிர்வாகங்கள் அளிக்க வேண்டும். அதாவது, இத்தகைய பிரிவினர் ரூ.1.25 லட்சத்தை மட்டும் கட்டணமாகச் செலுத்தினால் போதுமானது.
பெற்றோரின் எதிர்பார்ப்பு என்ன? பி.இ. படிப்பில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) சேரும் குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவருக்கு கல்விக் கட்டணச் சலுகை ரூ.20,000 கிடைக்கும் வகையில் கடந்த மே 16-ம் தேதி உயர் கல்வித் துறை ஆணை பிறப்பித்து விட்டது. இதனால் நடப்புக் கல்வி ஆண்டில் பி.இ. படிப்பில் சேரும் குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்குப் பிரச்னை இல்லை.
ஆனால், எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவருக்கு உரிய கல்விக் கட்டணச் சலுகை குறித்த ஆணையை சுகாதாரத் துறை இதுவரை பிறப்பிக்கவில்லை. மேலும் கடந்த கல்வி ஆண்டில் அரசு ஆணை பிறப்பித்தும்கூட சுயநிதி கல்லூரி நிர்வாகங்கள் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்தில் முதல் பட்டதாரி மாணவர் பிரிவில் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை ரூ.1.25 லட்சத்தை அளிக்கவில்லை என்ற புகாரும் உள்ளது.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 771 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்த மாத இறுதியில் 2-ம் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெற உள்ளது. எனவே குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவருக்கு உரிய கல்விக் கட்டணச் சலுகையை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களும் சுயநிதி மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களும் அளிக்கும் வகையில் உரிய அரசு ஆணையை விரைவில் சுகாதாரத் துறை பிறப்பிக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
எம்.பி.பி.எஸ். விண்ணப்ப தகவல் குறிப்பேட்டில்... குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு சுயநிதி மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் கல்விக் கட்டணச் சலுகை ரூ.1.25 லட்சத்தை வழங்கும் வகையில் கடந்த கல்வி ஆண்டில் (2010-11) வெளியிட்ட எம்.பி.பி.எஸ். விண்ணப்ப தகவல் குறிப்பேட்டில் நீதிபதி குழு நிர்ணயித்த ஆண்டுக் கட்டணம் தனியாகவும், கல்விக் கட்டணம் தனியாகவும் பிரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், நடப்புக் கல்வி ஆண்டுக்கான (2011-12) எம்.பி.பி.எஸ். விண்ணப்ப தகவல் குறிப்பேட்டில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் இவ்வாறு பிரித்துக் காண்பிக்கப்படவில்லை.
எனவே சுகாதாரத் துறை ஆணை வெளியிட்டு, சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கான ஆண்டுக் கட்டணத்தை (ரூ.2.50 லட்சம்) நிர்ணயித்து அறிவித்துள்ள நீதிபதி குழு மூலமும் கல்விக் கட்டணம் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படும் நிலையில்தான் குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு சலுகை கிடைப்பது உறுதி செய்யப்படும் என மருத்துவக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.