சென்னை, ஜூலை 9: தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னையில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டுக்கு வந்தார்.
பிரணாப் முகர்ஜியுடன் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.வீ.தங்கபாலு, மத்திய அமைச்சர் புதுவை நாராயணசாமி ஆகியோர் வந்தனர்.
தி.மு.க. நிர்வாகிகள் தயாநிதி மாறன், துரைமுருகன், பொன்முடி ஆகியோர் பிரணாப் முகர்ஜியை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பிரணாப் முகர்ஜி, கருணாநிதி சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் கருணாநிதியைச் சந்தித்து அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசிப்பது வழக்கம்.
இந்த அடிப்படையிலேயே இப்போதும் கருணாநிதியைச் சந்தித்தேன். நாட்டின் இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசித்தோம்.
கூட்டணி: தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. வலுவாக உள்ளது என்றார்.
மத்திய அமைச்சரவை மாற்றம், தயாநிதி மாறன் ராஜிநாமா விவகாரம் உள்பட வேறு எந்த கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
கனிமொழி விவகாரம்: பிரணாப் முகர்ஜியுடனான கனிமொழி விவகாரம் தொடர்பாகவும், மத்திய அமைச்சரவையில் தி.மு.க. சார்பில் புதிதாக இடம்பெறுபவர்கள் குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிகிறது.