திருக்கோவிலூர், ஜூலை 9: திருக்கோவிலூர் பகுதியில் செயல்பாடின்றி காட்சிப் பொருளாக மாறிப்போன உயர் கோபுர மின் விளக்குகளை செயல்பட வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருக்கோவிலூர் 4 முனை சந்திப்பில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு பழுதடைந்த நிலையில் மாதக்கணக்காக செயல்பாடின்றி காணப்படுகிறது. இக்கோபுரத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட மின் விளக்குகள் இதுவரையில் சரி செய்யப்படாமல் கேட்பாரற்றுக் கிடக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய பேருராட்சி நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோல் திருக்கோவிலூரை அடுத்த மணம்பூண்டி 4 முனை சந்திப்பில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு பழுதடைந்த நிலையில் மாதக்கணக்காக செயல்பாடின்றி காணப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய இக்கிராம ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. எந்த நோக்கத்துக்காக உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டதோ, அந்தநோக்கம் நிறைவேறும் வகையில், மேற்கண்ட உயர் கோபுர மின் விளக்குகளை சரி செய்திட, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.