தூத்துக்குடி, ஜூலை 9: கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் தூத்துக்குடி கடல் பகுதியில் தங்கி மீன் பிடிப்பதைக் கண்டித்து, தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் சனிக்கிழமை மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 250 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை தளமாகக் கொண்டு 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை விசைப்படகுகள் அதிகாலை 5 மணிக்கு கடலுக்குச் சென்றுவிட்டு இரவு 9 மணிக்குள் கரை திரும்பிவிட வேண்டும் என்பது விதிமுறை. தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்களுக்கு தங்குகடல் மீன்பிடிப்புக்கு அனுமதி கிடையாது.
ஆனால், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் தூத்துக்குடி பகுதியில் நடுக்கடலில் சில நாள்கள் தங்கி மீன்பிடித்துச் செல்கின்றனர். இதனால், தங்களுக்கு போதுமான மீன்கள் கிடைப்பதில்லை என தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இந்தப் பகுதியில் தங்கி மீன்பிடிப்பதைத் தடுக்க வேண்டும் அல்லது தங்களுக்கும் தங்குகடல் மீன்பிடிப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடந்த மாதம் 28-ம் தேதி திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் தலையிட்டு கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் தூத்துக்குடி பகுதியில் தங்கி மீன் பிடிப்பது தடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, மீனவர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு கடலுக்குச் சென்றனர்.
இந்நிலையில், சில நாள்களாக தூத்துக்குடி கடல் பகுதியில் மீண்டும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் தங்கி மீன்பிடித்து செல்வதைக் கண்டித்து தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் சனிக்கிழமை மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால், சுமார் 250 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இந்தப் பகுதியில் தங்கி மீன்பிடிப்பதைத் தடுக்க வேண்டும். இல்லையெனில் தூத்துக்குடி மீனவர்களுக்கும் தங்குகடல் மீன்பிடிப்புக்கு அனுமதிக்க வேண்டும்.
இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திங்கள்கிழமை முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார் தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் எஸ்.ஜோபாய் பர்னாந்து.