திருத்துறைப்பூண்டி, ஜூலை 9: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே மருத்துவர் வீட்டில் 220 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பாத்திரங்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை கொள்ளையடித்துச் சென்றனர்.
பெருகவாழ்ந்தான் காவல் சரகம் சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் எஸ்.விஜயகுமார். இவர் முத்துப்பேட்டையில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இவரது மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால், தனது மனைவி ஷீலாதேவி, மகன் பொறியாளர் மதன் ஆகியோருடன் வீட்டைப் பூட்டிவிட்டு, திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரைப் பார்க்க சென்று விட்டார்.இதற்கிடையே, வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் இருவர், பீரோவில் இருந்த 220 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பாத்திரங்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளனர்.
இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரையும் பார்த்த கிராம மக்கள் வழிமறித்து கேட்டபோது, இருவரும் பதில் சொல்லாமல் தப்பிச் சென்று விட்டனராம்.இதனால், சந்தேகமடைந்த கிராமத்தினர் மருத்துவர் வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது கதவு திறந்து கிடப்பதைக் கண்டு, போலீஸôருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்தைப் பார்வையிட்ட போலீஸôர், மருத்துவர் விஜயகுமாருக்குத் தகவல் தெரிவித்தனர்.மேலும், உடைக்கப்பட்ட பீரோவில் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த 80 பவுன் நகைகள் கொள்ளையர்கள் கண்களில் படாததால் தப்பியது தெரியவந்தது.இந்த சம்பவம் குறித்து பெருகவாழ்ந்தான் போலீஸôர் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.