உதகை, ஜூலை 9: புதிதாக குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்துள்ளவர்களில் தகுதியானவர்களுக்கு இன்னும் 2 மாதங்களுக்குள் புதிய குடும்ப அட்டை வழங்கப்படுமென உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன் தெரிவித்தார்.
உணவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் சனிக்கிழமை உதகைக்கு வந்த அமைச்சர் புத்திசந்திரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்கில் ஆய்வு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ரேஷன் அரிசி கடத்துவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நியாய விலைக் கடைகளில் மாதந்தோறும் விநியோகிக்கப்படும் பாமாயில், 85 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. மாதக்கடைசியில் வருவோருக்கு எண்ணெய் கிடைக்காத நிலை உள்ளது.
அதைத் தவிர்க்க, குறிப்பிட்ட மாதத்தில் பாமாயில் கிடைக்காதவர்களுக்கு அதற்கான டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு அடுத்த மாதத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.
இதன் மூலம் ஒரு மாதத்தில் பாமாயில் கிடைக்காவிட்டாலும், அடுத்த மாதத்திலாவது கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றார்.