69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க ஒன்றுமே செய்யவில்லை: ராமதாஸ்

சென்னை, ஜூலை 9: 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவரான நீதிபதி ஜனார்த்தனம் ஒன்றுமே செய்யவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் கூறியுள்ளார்.  இதுகுறித்து, சனிக்கிழமை அவர்
69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க ஒன்றுமே செய்யவில்லை: ராமதாஸ்
Published on
Updated on
1 min read

சென்னை, ஜூலை 9: 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவரான நீதிபதி ஜனார்த்தனம் ஒன்றுமே செய்யவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் கூறியுள்ளார்.

 இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

 திமுக ஆட்சியில் இருந்தபோது 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து வலியுறுத்தினேன். கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக, கணக்கெடுப்பு நடத்த ரூ.10 கோடி மட்டுமே செலவாகும் என அப்போது கூறினேன். ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ரூ.400 கோடி செலவாகும் என்று கூறி அத்தகைய கணக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுத்தவரே நீதிபதி ஜனார்த்தனம்தான்.

 இப்போது எந்தவிதமான கணக்கெடுப்புமே நடத்தாமல் தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான பல்வேறு விவரங்களை திரட்டி இருப்பதாகக் கூறி அதை முதல்வர் ஜெயலலிதாவிடம் தாக்கல் செய்திருக்கிறார்.

 இடஒதுக்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பில் கிரீமிலேயர் பற்றி உச்ச நீதிமன்றம் எதுவுமே கூறவில்லை. அதுபற்றிய விவரங்களையும் தந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாப்பது குறித்து அரசுக்கு அறிவுரை கூறவேண்டிய கடமை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் என்ற வகையில் நீதிபதி ஜனார்த்தனத்துக்கு உண்டு. ஆனால், அதற்காக கடந்த ஓராண்டில் துரும்பைக்கூட கிள்ளிப்போடாத அவர், இப்போது எங்கியிருந்தோ விவரங்களை திரட்டி விட்டதாகக் கூறி வெறும் கையால் முழம் போட்டிருக்கிறார்.

 நீதிபதி ஜனார்த்தனம் அளித்த விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று கோரினால் அதை உச்ச நீதிமன்றம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது.

 இந்த விஷயத்தில் இவரது அறிவுரையை கேட்பதும், இந்த வழக்கில் இடஒதுக்கீட்டு எதிர்பார்ப்பாளர்களுக்கு வெற்றியை அளிப்பதும் ஒன்றுதான்.

 ஜாதிவாரி கணக்கெடுப்பு: இப்போதுள்ள நிலையில், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க ஒரேவழி ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதுதான். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்ட போது அதை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாதான்.

 இப்போது மீண்டும் இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் ஜெயலலிதாவே முதல்வராக உள்ளார். எனவே, இப்போதும் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்திடம் ஓரிரு மாதங்கள் காலக்கெடு பெற்று, அதற்குள் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். இடஒதுக்கீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடு ஜூலை 12-ம் தேதியுடன் முடிவடைகிறது.

 உடனடியாக, இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா போர்க்கால அடிப்படையல் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்வதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.