தருமபுரி, ஜூலை 14: "சிப்காட்' அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி ஏந்தி பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாகலஹள்ளி ஊராட்சிக்குள்பட்ட பாகலஹள்ளி, மேட்டுக்கொட்டாய், பச்சியப்பன்கொட்டாய், குரும்பட்டி, தண்டுக்காரன்பட்டி, மல்லுக்காரன்கொட்டாய், வேட்ராயன்கொட்டாய் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இவற்றைச் சுற்றியுள்ள சுமார் 2,300 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந் நிலையில், பச்சியப்பன்கொட்டாய், மேட்டுக்கொட்டாய் ஆகிய கிராமங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கணேஷ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பச்சியப்பன்கொட்டாய் - சாமிசெட்டிப்பட்டி சாலையில் கறுப்பு பேட்ஜ் அணிந்து, கையில் கறுப்புக் கொடிகளுடன் காத்திருந்தனர். ஆனால், ஆட்சியர் வரவில்லை.
சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து இப் பகுதி கிராம மக்கள் கூறியது: கையகப்படுத்தப்படுவதாக கூறப்படும் 2,300 ஏக்கரில் பெரும்பாலனவை விளைநிலங்கள். சிப்காட் அமைத்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்என்றனர்.
மக்களுக்கு பாதிப்பு இருக்காது: இது குறித்து மாவட்ட ஆட்சியர் லில்லி கூறியது: சிப்காட் அமைக்க 2008-ம் ஆண்டு வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சிப்காட் அமைக்கப்படும். பின்தங்கிய மாவட்டமான தருமபுரியை முன்னேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.