கோவை, ஜூலை 14: திருப்பூர் பாசி போரக்ஸ் நிதி நிறுவன நிர்வாக இயக்குநரை மிரட்டி ரூ.3.5 கோடி பறித்த வழக்கில் டிஎஸ்பி ராஜேந்திரனை சிபிஐ பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸôர் கைது செய்தனர்.
அவருக்குப் பணம் வாங்கிக் கொடுத்தது தொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரையும் 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து சென்னை சிபிஐ விசாரித்து வருகிறது. திருப்பூரில் பாசி போரக்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, வாடிக்கையாளர்களிடம் ரூ.500 கோடி மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் கமலவள்ளி, மோகன்ராஜ், கதிரவன் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது.
தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் புகார் செய்தனர். இது தொடர்பாக திருப்பூர் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸôர் விசாரித்து வந்தனர்.
இதனிடையே நிர்வாக இயக்குநர் கமலவள்ளி, அப்போதைய திருப்பூர் எஸ்.பி. அருணிடம் புகார் செய்தார். அந்த புகாரில் டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சண்முகய்யா, மோகன்ராஜ் ஆகியோர் தன்னை கடத்தி மிரட்டி ரூ.3.5 கோடி பறித்துக் கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக அவிநாசி நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சண்முகய்யா, மோகன்ராஜ் ஆகியோர் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸôருக்கு மாற்றப்பட்டது. டிஎஸ்பி மலைச்சாமி தலைமையிலான போலீஸôர் வழக்கை விசாரித்து வந்தனர். கடந்த ஆண்டில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜை கைது செய்தனர். சண்முகய்யா நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். இதனிடையே டிஎஸ்பி ராஜேந்திரன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணையை, சிபிஐ பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸýக்கு மாற்ற வேண்டும் என்று முதலீட்டாளர்கள் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.
கடந்த மாதம் சிபிஐ வசம் வழக்கு தொடர்பான விவரங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதனிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி ராஜேந்திரனை, சென்னையில் இருந்து வந்த சிபிஐ தனிப்படை போலீஸôர் புதன்கிழமை கோவையில் கைது செய்தனர்.
பணம் வாங்கி கொடுத்தவரும் சிக்கினார்: இத்துடன், டிஎஸ்பி ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு பணம் வாங்கி கொடுத்தது தொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரையும் சிபிஐ தனிப்படை கைது செய்தது. பின்னர் இருவரையும் சிபிஐ நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தினர். அப்போது, நான்கு நாள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.