புதுச்சேரி, ஜூலை 14: புதுச்சேரி சிறுத்தொண்ட நாயனார் திருத்தொண்டு சபை சார்பில் வேதபுரீஸ்வரர் கோயிலில் மாங்கனித் திருவிழா வியாழக்கிழமை நடந்தது.
காரைக்கால் அம்மையாருக்கு சிவபெருமான் மாங்கனி வழங்கிய வரலாற்றை நினைவுக் கூறும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சிறுத்தொண்ட நாயனார் திருத்தொண்டு சபை சார்பில் வேதபுரீஸ்வரர், ஸ்ரீதிரிபுரசுந்தரி மூலவர் மற்றும் காரைக்கால் அம்மையார் மூலவர், உற்சவர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது.தொடர்ந்து மாங்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காரைக்கால் அம்மையார் அமரவைக்கப்பட்டு, ஆலய உள்புறப்பாடு, தேர்பவனி நடந்தது.தேவபுரீஸ்வரருக்கு மாங்கனி நிவேதம், தீபாராதனை நடந்தது. பின்னர் விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மாங்கனி பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை பாரதிதாசன் மகளிர் கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியர் ப.பட்டம்மாளின் சிறப்பு சொற்பொழிவும் நடந்தது.
இதில் சபையின் தலைவர் முத்துகிருஷ்ணசாமி, செயலர் இளங்கோ, நிர்வாகிகள் சுரேஷ், தமிழ் கணேசன், மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.