சென்னை, ஜூலை 30: இலங்கை இனப் பிரச்னைக்கான தீர்வு இப்போது இந்தியாவின் கையில்தான் உள்ளது என்று இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய சிறப்பு மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் அவர் பேசியதாவது:
இலங்கையில் போர் முடிந்து விட்டது. ஆனால், தமிழர்களின் பிரச்னைகள் முடியவில்லை. போருக்குப் பின்தான் பிரச்னைகள் மேலும் அதிகமாகியுள்ளன.
தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க வேண்டும், சம உரிமை வழங்க வேண்டும் என்ற சிந்தனையோ, அதற்கான அக்கறையோ இலங்கை அரசிடம் அறவே இல்லை.
அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற வேண்டும் என்பதில் இலங்கையின் ஆளும் கட்சி அதிக முனைப்பு காட்டியது.
ஆனால் தமிழ் மக்கள் ஓரணியில் நின்று, ராஜபட்சவுக்கு எதிராக வாக்களித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் பெரும் வெற்றி தந்தனர்.
இலங்கை அரசைப் பொருத்தவரை திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுடன் செயல்பட்டு வருகிறது. தமிழர் பகுதிகளை முதலில் ராணுவமயப்படுத்துவது. அதன் தொடர்ச்சியாக அந்தப் பகுதி முழுவதையும் புத்தமயமாக்குவது. இறுதியில் சிங்களமயமாக்குவது என்பதே இலங்கை அரசின் திட்டம்.
மொத்தத்தில், தமிழர்களுக்கு சம உரிமை அளிப்பதிலோ, அதிகார பகிர்வு வழங்குவதிலோ, சுமூகமான அரசியல் தீர்வை எட்டுவதிலோ இலங்கை அரசுக்கு துளியும் விருப்பமில்லை.
இந்த சூழலில், எந்த நாடு சொல்வதையும் கேட்க இலங்கை அரசு தயாராக இல்லை. ஆனால், இந்தியா சொல்வதை இலங்கை அரசால் மறுக்க முடியாது. இலங்கையை நிர்பந்தப்படுத்தி, தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கச் செய்ய இந்தியாவால் மட்டுமே முடியும்.
இலங்கைத் தமிழர்கள் இந்தியாவை மட்டுமே நம்பி உள்ளனர். இலங்கை இனப் பிரச்னைக்கான தீர்வு இப்போது இந்திய அரசின் கையில்தான் உள்ளது.
இப்போது கூட இந்தியா அதைச் செய்ய முன்வராவிட்டால், இலங்கையில் ஒரு இனத்தையே அழித்தொழித்த குற்றத்துக்கு இந்தியர்களும் துணை போனார்கள் என்றே எதிர்கால வரலாறு கூறும் என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.