சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ்: 289 காலியிடங்களுக்கு தொடர்ந்து கலந்தாய்வு

சென்னை, ஜூலை 30: தமிழகத்தில் இரண்டு நாள் கலந்தாய்வுக்குப் பிறகு 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 289 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் உள்ளன. காத்திருப்போர் பட்டியலில் சுமார் 30 மாணவர்கள்
சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ்: 289 காலியிடங்களுக்கு தொடர்ந்து கலந்தாய்வு
Published on
Updated on
3 min read

சென்னை, ஜூலை 30: தமிழகத்தில் இரண்டு நாள் கலந்தாய்வுக்குப் பிறகு 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 289 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் உள்ளன. காத்திருப்போர் பட்டியலில் சுமார் 30 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நடப்புக் கல்வி ஆண்டில் 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 913 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்தன. மொத்த இடங்களில் இதுவரை 624 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு கடந்த வியாழக்கிழமை (ஜூலை 28) தொடங்கியது.

கடந்த இரண்டு தினங்களாக (வெள்ளி, சனி) சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இருந்த அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்குக் கலந்தாய்வு நடைபெற்றது.

கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) கிடையாது. ஆகஸ்ட் 1-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் தொடர்ந்து ஆகஸ்ட் 4-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

ஓ.சி., பி.சி.-காலியிடம் இல்லை: மொத்தம் உள்ள 913 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில், அனைத்துப் பிரிவினர் (ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.) ஆகிய பிரிவினருக்கு உரிய அனைத்து 525 இடங்களும் நிரம்பிவிட்டன.

கீழ்ப்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் இந்தப் பிரிவினருக்கு மீதமிருந்த 171 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களிலும் சனிக்கிழமை பிற்பகலுக்குள் மாணவர்கள் சேர்ந்து விட்டனர்.

பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பினர், பழங்குடி வகுப்பினர் ஆகிய பிரிவினருக்கு மீதம் உள்ள 289 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு தொடர்ந்து ஆகஸ்ட் 4-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 28 பி.டி.எஸ். காலியிடங்கள் உள்ளன.

223 பேர் வரவில்லை: கீழ்ப்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு மொத்தம் 512 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்; ஆனால், 223 மாணவர்கள் கலந்தாய்வுக்கு வரவில்லை. மொத்தம் 289 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். இவர்களில் மொத்தம் 232 பேருக்கு சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.

அதாவது, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர 199 பேருக்கு சேர்க்கை கடிதம் அளிக்கப்பட்டது. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பில் சேர 25 மாணவர்களுக்கு சேர்க்கை கடிதம் அளிக்கப்பட்டது.

சுயநிதி பல் மருத்துவக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடத்தில் சேர 8 மாணவர்கள் சேர்க்கை கடிதம் பெற்றனர்.

காத்திருப்போர் பட்டியல்: கட்-ஆஃப் மதிப்பெண் 196 முதல் 195.75 வரை உள்ளோர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டும்கூட, சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்தில் சேர வாய்ப்பு கிடைக்காத சுமார் 30 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கலந்தாய்வில் பங்கேற்று இடம் கிடைத்தும் சுமார் 27 மாணவர்கள் சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். படிப்பு உள்பட எந்த மருத்துவ படிப்பையும் தேர்வு செய்யாமல் வெளியேறினர்; காலியிடம் ஏற்படும் நிலையில் இத்தகைய 27 மாணவர்களுக்கு மீண்டும் அழைப்பு அனுப்பப்பட மாட்டாது என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.

காத்திருப்போருக்கு ஆகஸ்ட் 18-ல் வாய்ப்பு

சுயநிதி அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் குறித்தும் காத்திருப்போருக்கு வாய்ப்பு குறித்தும் ஆகஸ்ட் 18-ம் தேதி தெரியவரும்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 913 இடங்களில் இதுவரை 624 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்பட்டு 289 காலியிடங்கள் உள்ளன. காத்திருப்போர் பட்டியலில் சனிக்கிழமை (ஜூலை 30) வரை 30 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று, சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு சேர்க்கை கடிதம் பெற்ற மாணவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் உரிய கல்லூரியில் சேர வேண்டும் என மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவுறுத்தியுள்ளது. எனவே சேராத மாணவர்கள் குறித்த நிலவரம் ஆகஸ்ட் 18-ம் தேதியன்று தெரியவரும்.

அதிர்ச்சி அடையும் பெற்றோர்: சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஒரு அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு நீதிபதி குழு ஆண்டுக் கட்டணமாக ரூ.2.5 லட்சத்தை நிர்ணயித்து அறிவித்துள்ள போதிலும், உரிய கல்லூரியில் சேருவதற்கு பெற்றோருடன் மாணவர் செல்லும்போது கட்டண அதிர்ச்சி அளிக்கப்படுகிறது.

ஆண்டுக் கட்டணம் ரூ.2.5 லட்சத்துடன் சேர்த்து, சிறப்புக் கட்டணம்-புத்தகக் கட்டணம்-விடுதி வசதி கோரினால் அதற்குரிய கட்டணம் என ஆண்டுக்கு ரூ.5 லட்சம் அல்லது ரூ.6 லட்சத்தைச் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால்தான் சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் இப்போது சேர்ந்துள்ளவர்களில் பலர் சேராமல் காலியிடங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேராவிட்டால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று, சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு சேர்க்கை கடிதம் பெற்றுள்ள மாணவர்கள் முன் தொகையாக ரூ.25,000 செலுத்தியுள்ளனர்; உரிய சுயநிதி கல்லூரியில் ஒரு மாணவர் சேராமல் போகும் நிலையில் முன் தொகை ரூ.25 ஆயிரத்தில், ரூ.12,500-ஐ மட்டும் மருத்துக் கல்வி தேர்வுக் குழு திரும்ப அளிக்கும்.

மூன்றாம் கட்ட கலந்தாய்வு எப்போது? உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அந்தந்த மாநில மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிக்க வேண்டும். சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில், ஏற்படும் காலியிட நிலவரம் ஆகஸ்ட் 18-ம் தேதி தெரியும் என்பதால், ஆகஸ்ட் 3-வது வாரத்தில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.