தமிழர்களுக்கு சம உரிமை அளித்தால்தான் இலங்கை வளர்ச்சி பெறும்: பிரகாஷ் காரத்

சென்னை, ஜூலை 30: தமிழர்களுக்கு சம உரிமை அளித்தால்தான் இலங்கை வளர்ச்சி பெற முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் தெரிவித்தார். இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் தீ
தமிழர்களுக்கு சம உரிமை அளித்தால்தான் இலங்கை வளர்ச்சி பெறும்: பிரகாஷ் காரத்
Published on
Updated on
1 min read

சென்னை, ஜூலை 30: தமிழர்களுக்கு சம உரிமை அளித்தால்தான் இலங்கை வளர்ச்சி பெற முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.

இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் சனிக்கிழமை சிறப்பு மாநாடு நடைபெற்றது.

மாநாட்டைத் தொடங்கி வைத்து காரத் பேசியதாவது:

இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. போருக்குப் பின் இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதுதான் இலங்கை அரசின் உடனடிப் பணியாக இருந்திருக்க வேண்டும். எனினும், தமிழ் மக்களுக்கு சம உரிமை அளிப்பதிலும், அதிகார பகிர்வு அளிப்பதிலும் இலங்கை அதிபர் ராஜபட்ச ஆர்வம் காட்டவில்லை.

போர் முடிந்த பின் அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று ராஜபட்ச முதலில் தெரிவித்தார். எனினும்,இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இலங்கை இனப் பிரச்னையால் தமிழர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படவில்லை. ஒட்டுமொத்த இலங்கை மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எல்லா மக்களின் நலன்களும் காக்கப்பட வேண்டுமானால் முதலில் இனப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். எனவே, இலங்கை வளர்ச்சி பெற வேண்டுமானால் தமிழ் மக்களுக்கு சம உரிமை அளிப்பது மிகவும் அவசியமாகும்.

நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட இலங்கை தமிழ் தேசியக் கூட்டணி நிர்வாகிகள் அங்கு உள்ளனர். அவர்களுடன் இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு தொடங்க வேண்டும்.

ஆனால், இத்தகைய அரசியல் தீர்வுக்கு தடையாக இலங்கை ராணுவத்தினர் உள்ளனர். எனவே, தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் பேசி, அரசியல் தீர்வை எட்ட இலங்கை அரசு முன்வர வேண்டும். ஏற்கெனவே 1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்திய - இலங்கை உடன்பாட்டின்படி இப்போது தீர்வு காண இயலாது. எனவே, அரசியல் தீர்வை எட்ட ஒரு புதிய அணுகுமுறையோடு இலங்கை அரசு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

மேலும், இறுதிப் போரின்போது இலங்கை ராணுவ வீரர்களால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் பற்றி அதிக அதிகாரங்களைக் கொண்ட, சுதந்திரமான அமைப்பின் மூலம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தமிழர் குடியிருப்பு பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை படிப்படியாக குறைப்பதுடன், நெருக்கடி கால சட்டங்களை அறவே நீக்க வேண்டும்.

இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது என்றார் பிரகாஷ் காரத்.

மாநாட்டுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.