சென்னை, ஜூலை 30: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமூகத்தவரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக 5.9.2003-ல் அப்போதைய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சருக்குத் தாம் எழுதிய கடிதத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். 1931 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தச் சமூகத்தவர் பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படுகர் சமூகத்தவர் முன்வைத்துள்ள சான்றுகள், நீலகிரி பகுதியில் பல நூறு ஆண்டுகளாக தோடர் இன மக்களைப் போல அவர்களும் வாழ்ந்து வருவதை நிரூபிப்பதாக இருக்கின்றன.
மலைப் பகுதியில் தனியே வாழ வேண்டும் என்ற விதிமுறை இப்போது எந்தவொரு பழங்குடியின சமூகத்தினருக்கும் பொருந்தாது என்றும், வாழ்க்கைமுறை மேம்பாடு காரணமாகவும், அரசின் பல்வேறு திட்டங்கள் செயலாக்கத்தாலும் அவர்களின் நிலை மேம்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே அந்தச் சமூகத்தவரை பழங்குடியினப் பட்டியலில் சேர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரை வலியுறுத்தியுள்ளார் முதல்வர்.
அமைச்சர் நன்றி: கடந்த 26-ம் தேதி படுகர் இன சமுதாயப் பிரதிநிதிகள் முதல்வரைச் சந்தித்து இதுகுறித்த கோரிக்கையைத் தெரிவித்தனர். இப்போது இது தொடர்பாகப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதற்காக முதல்வருக்கு படுகர் இன மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக உணவு அமைச்சர் புத்திசந்திரன் தெரிவித்துள்ளார்.