Enable Javscript for better performance
வழக்கிற்கு பயந்தே கச்சத்தீவை தாரை வார்த்தார் கருணாநிதி : விஜயகாந்த்- Dinamani

சுடச்சுட

    

    வழக்கிற்கு பயந்தே கச்சத்தீவை தாரை வார்த்தார் கருணாநிதி : விஜயகாந்த்

    Published on : 20th September 2012 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vijakanth

    சென்னை, ஜூன் 9: தன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்க மத்திய அரசு எடுத்த முடிவுக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்துவிட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறினார்.

     கச்சத்தீவு வழக்கு தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விஜயகாந்த் பேசியது:

     முதல்வர் உள்ளிட்டோர் மீது ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் சட்டத்தை 1972-லேயே திமுக அரசு கொண்டு வந்ததாகவும், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றோர் அதைப் பாராட்டியதாகவும் கூறிய செய்திகளைப் படித்தேன்.

     1972-ல் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். அப்போது திமுக அரசு மீது ஊழல் புகார்ப் பட்டியலை மத்திய அரசிடம் சமர்ப்பித்தார். அப்போது அது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கு இருந்தது. அதற்குப் பயந்துதான், கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட போது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார்கள்.

     நான் அப்போது கச்சத்தீவுக்கு சென்றிருக்கிறேன்.

     குடியரசுத் தலைவராக வி.வி. கிரி இருந்தபோது மேற்குவங்கத்தில் இருந்து ஒரு பகுதியை வங்கதேசத்துக்கு பிரித்துக் கொடுத்தனர். அப்போது மேற்குவங்க மாநில முதல்வராக இருந்த பி.சி. ராய் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அதன் தொடர்ச்சியாகவே, நாடாளுமன்ற அவைகளின் ஒப்புதல் இல்லாமல் இவ்வாறு நாட்டின் பகுதியைப் பிரித்து தர முடியாது என தீர்ப்பு வெளியாகி, நாட்டின் பகுதிகள் காப்பாற்றப்பட்டன.

     அந்த தைரியம் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஏன் இல்லாமல் போனது? தன் மீது சொத்து குவிப்பு வழக்கு வந்துவிடும், அதிக சொத்து சேர்த்த வழக்கு வந்துவிடும் என்பதால் தாரை வார்த்துவிட்டார்.

     அதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை. சட்டப்பேரவை தீர்மானம் கண்துடைப்பு நாடகம் போல அமைந்துவிட்டது.

     மக்களின் குறைகளை அறிந்து நடப்பதுதான் ஜனநாயகம். கச்சத்தீவை தாரைவார்க்கும்போது அந்த மீனவர்களின் கருத்துகள் கேட்கப்படவில்லை. இது என்ன ஜனநாயகம் என்று தெரியவில்லை.

     அந்தக் காலத்தில் அவர்களுக்கு பண்டமாற்று சுதந்திரம் இருந்தது. இப்போது அது இல்லாமல் போய்விட்டது.

     அந்த மீனவர்களுக்கு கச்சத்தீவு திரும்பக் கிடைக்க வேண்டும் என்றார் விஜயகாந்த்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai