சுடச்சுட

  
  lordoflords

  மதுரை, செப். 7: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு சுந்தரேசுவரர் பிட்டுக்கு மண் சுமக்கும் திருவிளையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

  திருவாதவூரடிகளின் பெருமையைப் பாண்டியனுக்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான், வைகையில் வெள்ளம் கரை புரண்டோடச் செய்தார். அந்நிலையில், வீட்டுக்கு ஒருவர் கரையைப் பலப்படுத்த வருமாறு பாண்டிய மன்னன் உத்தரவிட்டான். இந்த நிலையில் பிட்டு விற்றுப் பிழைக்கும் சிவபக்தையான வந்தியக்கிழவிக்கு ஆள் இல்லாத நிலையில், சிவபெருமானே கூலி ஆளாக வந்து பிட்டுக்காக மண் சுமந்துள்ளார். அப்போது அவர் கரையை அடைக்கும் பணியைச் செய்யாமல் படுத்துக்கிடந்தாதால், மன்னன் கூலியாளாக வந்த சிவபெருமானை பிரம்பால் அடித்ததாகவும், அந்த அடியின் வலியை உலகில் உள்ள அனைவரும் உணர்ந்ததாகவும், இதையடுத்து சிவபெருமானை மன்னன் வணங்கி நின்றதாகவும் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

  சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி மதுரை புட்டுத்தோப்பு பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் நடத்திக் காட்டப்பட்டது. இதையடுத்து அருள்மிகு சுவாமி பிரியாவிடையுடனும், அம்மனும் திருக்கோயிலில் இருந்து புதன்கிழமை காலை புறப்பாடாகி சிம்மக்கல், ஒர்க்ஷாப் சாலை வழியாக புட்டுத்தோப்பை அடைந்தனர். இதையடுத்து திருக்கோயில் நடை சாத்தப்பட்டது.

  அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயிலில் எழுந்தருளிய சுவாமி, அம்மனை பக்தர்கள் வணங்கினர். அங்கு திருப்பரங்குன்றத்திலிருந்து வந்து எழுந்தருளியிருந்த சுப்பிரமணிய சுவாமி, திருவாதவூரிலிருந்து வந்து எழுந்தருளியிருந்த மாணிக்கவாசகர் சுவாமிகளும் புட்டுத் தோப்பு நிகழ்ச்சியில் எழுந்தருளியிருந்தனர்.

  பின்னர் திருக்கோயில் மைதானத்தில் புட்டுத் திருவிழா பூஜைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை பிட்டு உற்சவ வகையறா கட்டளையினர் செய்திருந்தனர்.

  இந்த நிகழ்ச்சியில் திருக்கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், கோயில் செயல் அலுவலரும் இணை ஆணையருமான பி.ஜெயராமன், பேஷ்கார் சிவானந்தம், மேலாளர் சம்பூரணம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  நிகழ்ச்சி நிறைவுற்ற நிலையில் இரவு சுவாமி, அம்மன் புறப்பட்டு மீண்டும் திருக்கோயிலை வந்தடைந்தனர். அதன் பிறகே மீனாட்சியம்மன் திருக்கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி மீண்டும் திருக்கோயிலுக்கு இரவில் புறப்பாடாகிச் சென்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai