சினிமாவுக்கு வர தன்னம்பிக்கை வேண்டும்: இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்

சினிமாவுக்கு வர தன்னம்பிக்கை வேண்டும்: இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்

அரக்கோணம், பிப். 11: சினிமா தொழிலுக்கு வர நினைப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் வரவேண்டும் என திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூறினார்.  அரக்கோணம் வாசக எழுத்தாளர் சங்க அமைப்பான உரத்த சிந்தனை, சமுக விழ
Published on

அரக்கோணம், பிப். 11: சினிமா தொழிலுக்கு வர நினைப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் வரவேண்டும் என திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

 அரக்கோணம் வாசக எழுத்தாளர் சங்க அமைப்பான உரத்த சிந்தனை, சமுக விழிப்புணர்வு சேவை சங்கமான நல்லோர் வங்கி மற்றும் செல்வம் மெட்ரிக் பள்ளி சார்பில் பள்ளி வளாகத்தில் ஹோமியோ மருத்துவ சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்த எஸ்.பி.முத்துராமன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

 இதுவரை 70 படங்களை இயக்கியுள்ளேன். ரஜினியை வைத்து 25, கமலை வைத்து 10, சிவாஜியை வைத்து 3 உள்ளிட்ட படங்கள் இதில் அடங்கும்.

 ஆரம்பத்தில் கவியரசு கண்ணதாசனின் தென்றல் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக பணி புரிந்தேன். ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியார் என்னை திரைப்படத்தில் எடிட்டிங் துறையில் பணியாற்ற அழைத்தார். நான் பணியாற்றிய முதல் படம் களத்தூர் கண்ணம்மா.

 என் சினிமா வாழ்க்கையில் சாதனைகள் என்றால், "ராஜா சின்ன ரோஜா' படத்தில் அனிமேஷனை இணைத்ததைச் சொல்லலாம். அது மக்களை பெரிய அளவில் கவர்ந்தது.

 இன்று சினிமாவில் இருப்பவர்கள் நினைத்தவுடன் சாதனை படைத்தவர்கள் அல்ல. பெட்ரோல் பங்கில் வேலை செய்து, பல படிகளை ஏறி இறங்கியவர்தான் 16 வயதினிலே தந்த பாரதிராஜா. கையில் காசு இல்லாத நிலையில் பல கிலோ மீட்டர் நடந்து வந்து வாய்ப்பு தேடி அலைந்தவர்தான் மேஸ்ட்ரோ இளையராஜா.

 சினிமா தொழில், அரசு அலுவலகங்களில் பணிபுரிவது போல காலை 10 மணிக்கு வந்து மாலை 6 மணிக்கு செல்வது அல்ல. குடும்பத்தை மறந்து காலம் நேரம் பார்க்காமல் வேலை செய்தால்தான் இங்கு சாதனை படைக்க முடியும்.

 சினிமாவுக்கு வருபவர்கள் முதலில் தன்னம்பிக்கையுடன் வரவேண்டும். "கதையை எழதியிருக்கிறேன், படித்துப் பாருங்கள்' என காண்பிப்பவர் முதலில் தமிழை நன்றாக எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் எஸ்.பி.முத்துராமன்.

 உரத்த சிந்தனை அமைப்பை சேர்ந்த எழுத்தாளர் சீ.மோகன், அரக்கோணம் டவுன்ஹால் சங்க செயலர் டாக்டர் பன்னீர்செல்வம், செல்வம் மெட்ரிக் பள்ளி முதல்வர் சே.செல்வம், தாளாளர் அமுதா செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்