சேலத்தில் பயிற்சி மருத்துவர்கள் இரவில் திடீர் சாலை மறியல்
சேலம், பிப். 11: சேலத்தில் பயிற்சி மருத்துவர்கள் தங்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமை இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் கொல்லப்பட்டியில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பயின்று வருகின்றனர். மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. விடுதியின் அருகில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. அந்த விளையாட்டு மைதானத்தில் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சென்று கிரிக்கெட் விளையாடுவார்களாம்.
அப்போது அவர்கள் மது குடிப்பதும், பந்தை கொண்டு அடித்து விடுதியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுவார்களாம். சனிக்கிழமை மாலை அவர்கள் வழக்கம் போல் அங்கு சென்று விளையாடினார்களாம்.
அப்போது பயிற்சி மருத்துவர்கள் சிலர் அவர்களிடம், மைதானத்தில் விளையாட வேண்டாம் எனத் தெரிவித்தார்களாம். இதனால் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினரும் மோதிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதில் பயிற்சி மருத்துவர்கள் வாணியம்பாடிச் சேர்ந்த பாலா (22), ஈரோடு கௌதம் (22), குடியாத்தம் பிரசாந்த் (23), ஜோலார்பேட்டை அர்ஜூணன் (22), ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லோகேஷ் (22) உள்ளிட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் தாங்கள் தாக்கப்பட்டதாகக் கூறி சிகிச்சை மேற்கொண்டனர். மேலும், இது குறித்து தகவல் அறிந்த 50-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் எதிரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விரைந்து வந்த கூடுதல் காவல் துணை ஆணையர் ராஜராஜன் தலைமையிலான போலீஸôர், மாணவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில், தாக்கியதாகக் கூறப்படும் இளைஞர்களை ஒரு மணி நேரத்தில் பிடித்து விசாரணை மேற்கொள்வதாக போலீஸார் வாக்குறுதி அளித்ததன் பேரில் மாணவர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். மாணவர்கள் மேற்கொண்ட திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.