சென்னை, பிப்.11: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பயணப்படி விவரங்களைத் தர முடியாது என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் கே.பாலசந்தர். அவர் காவல் துறையில் பணியாற்றும் போலீஸôருக்கு வழங்கப்படும் பயணப்படி விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தரும்படி மாநில தகவல் ஆணையத்திடம் கோரியிருந்தார்.
அவருடைய மனு கடந்த மாதம் 21-ம் தேதி பரிசீலிக்கப்பட்டது. மனுவை நிராகரித்து தலைமைத் தகவல் அதிகாரி கே.எஸ்.ஸ்ரீபதி உத்தரவிட்டுள்ளார். "பயணப்படி விவரங்கள்' என்பவை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பிரிவாகும்.
எனவே போலீஸாருக்கு வழங்கப்படும் பயணப்படி விவரங்கள் குறித்த தகவல்களை அளிக்க முடியாது என்று தனது உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் வரிப்பணம்: பொதுமக்களின் வரிப்பணத்திலே அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட இதர படிகள் வழங்கப்படுகிறது. அதுபோன்று அளிக்கப்படும் படிகள் குறித்த விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தர மறுப்பது அரசு ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போலீஸாருக்கு அளிக்கப்படும் பயணப்படி விவரங்கள் குறித்த தகவல்களைத் தர மறுப்பதன் மூலம் அரசின் பிற துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் படிகள் குறித்த விவரங்களையும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.