நாகர்கோவில், பிப். 11: திமுகவுக்கு வலுசேர்க்கும் வகையில் இளைஞர்களும், மாணவர்களும் பங்காற்றி வருவதாக அக்கட்சியின் பொருளாளரும், இளைஞரணி மாநிலச் செயலருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான என். சுரேஷ்ராஜன் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியை மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
திமுகவின் துணை அமைப்பான இளைஞரணி 1989-ல் தொடங்கப்பட்டது. முன்னர், மாவட்டச் செயலர்களின் பரிந்துரையின்பேரில் இளைஞரணிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இப்போது தனியாக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1967-ல் தமிழகத்தில் அண்ணா தலைமையில் அமைந்த ஆட்சியின் வெற்றிக்கு தலைவர்களின் பிரசாரம் ஒருபுறம் இருப்பினும், மறுபுறம் மாணவர்களும், இளைஞர்களும் உறுதுணையாக இருந்தனர். மொழிப் போராட்டத்தின்போது இளைஞர்கள் உணர்வுப்பூர்வமாக ஈடுபட்டதுடன் பலர் உயிரையும் மாய்த்தனர். ஆனால், இன்று அந்த நிலையில் மாணவர்கள் இல்லாதது வருத்தமளிக்கிறது.
இங்கு இளைஞரணி நிர்வாகிகள் தேர்வுக்கு 819 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். இவர்களில் 20 முதல் 25 சதவிகிதம் பேர் மட்டும் தேர்வு செய்யப்படுவர்.
மற்றவர்களுக்கு கட்சியின் மற்ற அமைப்புகளில் இணைந்து செயல்பட வாய்ப்பளிக்கப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மாநில இணைஞரணி துணைச் செயலர்கள் சுகவனம் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், சென்னை முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன், சுப. சந்திரசேகரன், அசன் முகமது ஜின்னா, திருநெல்வேலி மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமி பாண்டியன், ஜெ. ஹெலன் டேவிட்சன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.